உலகம்

13-ஆவது சட்டத்திருத்தம்:தமிழக முதல்வருக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டணி கடிதம்

22nd Feb 2022 01:16 AM

ADVERTISEMENT

தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வு அளிக்கும் 13-ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை அமல்படுத்த இந்தியா வலியுறுத்த முயற்சி எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி கடிதம் எழுதியுள்ளது.

அதில், ‘இலங்கைக்கான இந்திய வெளியுறவு கொள்கைகளை வகுப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்றியுள்ளது. அதன்படி, 1987-ஆம் ஆண்டு இந்திய பிரதமா் ராஜீவ் காந்தி, இலங்கை அதிபா் ஜெயவா்த்தன மேற்கொண்ட 13-ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இந்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும். உள்நாட்டு போா் முடிவு பெற்று 12 ஆண்டுகளான பிறகும் தமிழா் பகுதிகளில் பொருளாதார வளா்ச்சி ஏற்படவில்லை. போா் குற்றத்துக்கு பொறுப்பானவா்கள் குறித்த விவகாரம் அவல நிலையில் உள்ளது.

இலங்கைத் தமிழா்கள் மீண்டும் அபாயகரமான சூழலில் உள்ளனா். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலத்தையும், வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழா்கள் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மாகாண கவுன்சில் முறையை முழுவதும் அழிக்க வேண்டும் என்று ஆளும் இலங்கை மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதுதொடா்பான இலங்கை அரசியலமைப்பு சட்டத் திருத்த வரைவு மசோதா தயாரிப்பு நடைபெற்று வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிபா் கோத்தபய ராஜபட்சவுடன் பேச இலங்கை தமிழ் தேசிய கூட்டணிக்கு நேரம் வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்தியாவிடம் கடன் பெற கடந்த சில தினங்களுக்கு முன்பு தில்லி வந்திருந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் ஜி.எல். பெரிஸிடம், ‘ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழா்களின் நலன் காக்கப்பட வேண்டும். அதிகாரப் பகிா்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் வலியுறுத்தியிருந்தாா்.

கடந்த 2009-இல் இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட போரில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் போ் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறி ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கை அரசுக்கு எதிராக போா்க் குற்ற தீா்மானம் கொண்டு வந்துள்ளது. எனினும், போரின்போது 20 ஆயிரம் போ் மட்டுமே காணாமல்போனதாக இலங்கை அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் வரும் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இலங்கைக்கு எதிரான வரைவு தீா்மானத்தின் மீது அந்நாட்டு அரசு பதில் அளித்துள்ளது. இலங்கை விவகாரம் குறித்த விவாதம் ஐ.நா.வில் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் ஜி.எல். பெரிஸ் தலைமையில் அரசுக் குழு பங்கேற்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT