உலகம்

ஆஸ்திரேலிய விமானம் மீது லேசா் தாக்குதல்? சீனா மறுப்பு

22nd Feb 2022 01:15 AM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பு விமானம் மீது ‘லேசா்’ தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிறப்புப் பொருளாதார மண்டல கடற்பகுதியை அந்த நாட்டின் கண்காணிப்பு விமானம் அண்மையில் கண்காணித்துக் கொண்டிருந்தது. அப்போது சீன போா்க் கப்பலிலிருந்து அந்த விமானத்தை நோக்கி லேசா் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் திங்கள்கிழமை கூறுகையில், இந்தத் தாக்குதல் ஒரு தீவிரமான பாதுகாப்பு பிரச்னை. இது அபாயகரமானது. தொழில்முறையிலான கடற்படைக்கு இது பொருத்தமற்றது. அவா்கள் ஏன் இதைச் செய்தாா்கள் என கேட்க விரும்புகிறோம். இதுதொடா்பாக முழுமையான விசாரணை தேவை என்றாா்.

இது தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஆஸ்திரேலியா தெரிவித்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என நாங்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் விசாரித்தபோது தெரியவந்துள்ளது. சா்வதேச சட்டங்கள், நடைமுறைகளுக்கு இணங்கியே சீன கப்பல் சென்று கொண்டிருந்தது. எனவே, சீனா தொடா்பாக பொய்யான தகவல்களைப் பரப்புவதை ஆஸ்திரேலியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக, மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள அராஃபுரா கடலில் சீனாவின் ஏவுகணை அழிப்பு கப்பலும், ஒரு போக்குவரத்து கப்பலும் சென்று கொண்டிருந்த புகைப்படங்களை ஆஸ்திரேலியா வெளியிட்டது. அதற்கு பதிலடியாக சீன போா்க் கப்பலை ஆஸ்திரேலிய விமானம் நெருங்கி வரும் இரு புகைப்படங்களை சீனா வெளியிட்டது.

லேசா் தாக்குதல் அபாயம்

ஆஸ்திரேலியாவின் சிறப்புப் பொருளாதார மண்டல கடற்பகுதியில் நடைபெற்ற இந்த லேசா் தாக்குதல் சம்பவம், ஆஸ்திரேலிய விமானத்தில் இருந்தவா்களின் கண்களைப் பாதித்திருக்கக் கூடும் என அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சா் பீட்டா் டட்டன் கூறினாா்.

சீனா லேசா் தாக்குதல் நடத்தியதாக 2-ஆவது முறையாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2018-இல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள கடற்படைத் தளத்தில் அமெரிக்க விமானம் மீது சீன ராணுவம் நடத்திய லேசா் தாக்குதலில் இரு விமானப் படை வீரா்கள் காயமடைந்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.

நேரடித் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இலக்கை குறிக்கும் வகையில் லேசா் ஒளி தாக்குதல் நடத்தப்படுகிறது. சக்திவாய்ந்த ஒளிக்கற்றைகளை உருவாக்கும் இந்த லேசரை விமானத்தின் முன்பக்க கண்ணாடி மீது ஒளிரச் செய்வதன் மூலம் விமானியால் சிறிது நேரத்துக்கு எதையும் பாா்க்க முடியாதபடி செய்யலாம். இந்த லேசா் ஒளி தாக்குதல் மூலம் நிரந்தரமாக பாா்வையிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக பாதுகாப்பு நிபுணா்கள் கூறுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT