உலகம்

57 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய ஒமைக்ரான்...உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

2nd Feb 2022 01:30 PM

ADVERTISEMENT

உருமாறும் தன்மை கொண்ட கரோனா வைரஸ் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இதை கட்டுப்படுத்த உலக விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றனர். கரோனா, டெல்டா ஆகியவை  உருமாறிய நிலையில், ஒமைக்ரான் கரோனா வைரசும் தற்போது உருமாறியுள்ளது. 

உருமாறிய ஒமைக்ரானின் துணை  வகை வைரஸ், அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது 57 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுளளது. 

ஒமைக்ரான் வைரஸ், 10 வாரங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் அதிக மாறுதல்களை கொண்டதாக உள்ளது. தற்போது, கரோனா மற்றும் டெல்டா வகையை காட்டிலும் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையே அதிகரித்து காணப்படுகிறது. 

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஒரு மாதத்தில், கரோனாவால் பாதிக்கப்படுவோரில் 93 சதவிகிதத்தினரின் மாதிரியில் பிஏ.1, பிஏ.1.1, பிஏ.2 பிஏ.3 ஆகிய துணை வகைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிஏ.1 மற்றும் பிஏ.1.1 ஆகிய வகைகள்தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஜிஐஎஸ்ஏஐடி என்ற உலக அறிவியல் அமைப்பிடம் சமர்பிக்கப்பட்ட மாதிரிகளில் 96 சதவிகிதம் பிஏ.1, பிஏ.1.1 ஆகிய வகைகளை சேர்ந்ததுதான். பிஏ.2 வகை கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவது தெளிவாக தெரிகிறது.

எந்த வைரஸிலிருந்து உருபெற்றதோ அதிலிருந்து நிறைய மாறுபாடுகளை பிஏ.2 வகை கொண்டுள்ளது. குறிப்பாக, மனித அணுக்களில் நுழைவதற்கு இது முக்கிய பங்காற்றுகிறது. துணை மாறுபாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் பற்றி இன்னும் அதிகம் அறியப்படவில்லை. 

இதையும் படிக்கஆட்சிக் கவிழ்ப்பு ஆண்டு தினம்: மியான்மரில் திரும்புமா அமைதி?

மேலும் அதன் பரவும் தன்மை, நோயெதிர்ப்பு பாதுகாப்பு மற்றும் அதன் வீரியம் ஆகியவற்றைத் தடுப்பதில் இது எவ்வளவு சிறந்தது என்பது உள்பட அதன் குணாதிசயங்கள் பற்றிய ஆய்வுகள் தேவை. பல சமீபத்திய ஆய்வுகள், அசல் ஒமைக்ரானை விட பிஏ.2 மிக வேகமாக பரவும் எனக் கூறியுள்ளது. துணை-வேறுபாடுகள் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT