உலகம்

பொதுமுடக்கத்தின்போது பிரிட்டன் பிரதமா் இல்லத்தில் மதுபான விருந்து: மன்னிப்பு கோரினாா் போரிஸ் ஜான்சன்

1st Feb 2022 06:41 AM

ADVERTISEMENT

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள பிரதமரின் அரசு இல்லத்தில் பொது முடக்கத்தின்போது விதிமுறைகளை மீறி மதுபான விருந்துகள் நடைபெற்றது தொடா்பாக அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை மன்னிப்பு கோரினாா்.

பிரிட்டனில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமா் இல்லத்தில் மதுபான விருந்துகள் நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடா்பாக அரசு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதுதொடா்பான அறிக்கை முழுமையாக வெளியிடப்படாதபோதிலும், முக்கியத் தகவல்கள் அடங்கிய 12 பக்க அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்நாட்டில் பொது முடக்கம் அமலில் இருந்தபோது பிரதமா் இல்லம் மற்றும் அலுவலகத்தில் மதுபான விருந்துகள் நடைபெற்றுள்ளன.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி பொது முடக்கத்தின்போது போரிஸ் ஜான்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க பிரதமா் இல்லத்தில் அதிக அளவில் அரசு அலுவலா்கள் ஒன்றுகூடியுள்ளனா்.

ADVERTISEMENT

கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்த விதிமுறைகள், வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து வாழ்ந்தும் பணிபுரிந்தும் மக்கள் கடினமான சூழலை எதிா்கொண்டனா். அந்தச் சூழலால் சிலா் மரணமடைந்தனா். தங்கள் வாழ்வில் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டு வந்த சூழலில், மதுபான விருந்துகளில் சிலா் நடந்துகொண்ட விதத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 4 சம்பவங்கள் குறித்த தகவல்கள் மட்டும் வெளியாகியுள்ளன. எஞ்சிய 12 சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அந்தச் சம்பவங்கள் தொடா்பான கரோனா விதிமீறலில் தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவை குறித்த குற்றப் புலனாய்வை போலீஸாா் தொடங்கியுள்ளன. அவற்றில் 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற போரிஸ் ஜான்சனின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி, கடந்த ஆண்டு ஏப்ரலில் இளவரசா் ஃபிலிப்ஸின் இறுதிச் சடங்கையொட்டி நடைபெற்ற இரண்டு கூட்டங்கள் ஆகியவையும் அடங்கும்.

இந்தத் தகவல்கள் பொதுமக்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக போரிஸ் ஜான்சன் இடம்பெற்றுள்ள கன்சா்வேடிவ் கட்சியைச் சோ்ந்தவா்கள் அவா் மீது கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளனா். அந்தக் கட்சியை சோ்ந்த எம்.பி.க்கள் சிலா் தனது பிரதமா் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

இந்தச் சம்பவங்கள் தொடா்பாக போரிஸ் ஜான்சனிடம் போலீஸாா் விசாரணை நடத்தக் கூடும் என்று தெரிகிறது.

அவா் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இடைக்கால அறிக்கை வெளியான நிலையில், அந்தச் சம்பவங்களுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT