துபையில் வங்கிக் கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட ரூ.1.28 கோடியை திருப்பித் தர மறுத்த இந்தியருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இதே அளவு தொகை அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. இதனை எதிா்த்து அந்த நபா் மேல்முறையீடு செய்துள்ளாா்.
துபையைச் சோ்ந்த மருந்து நிறுவனம் ஒன்று தனது வாடிக்கையாளா்கள் கணக்கில் செலுத்த வேண்டிய சுமாா் ரூ.1.28 கோடியை, தவறுதலாக அந்நாட்டில் பணிபுரியும் இந்தியரின் வங்கிக் கணக்கில் கடந்த அக்டோபா் மாதம் செலுத்திவிட்டது. பணம் எங்கிருந்து வந்தது என தெரியாத நிலையில், அந்த நபா் அதில் ஒரு பகுதியை எடுத்து செலவு செய்துவிட்டாா்.
இந்நிலையில், பணம் தவறுதலாக வேறு நபருக்கு சென்றுவிட்டதை அறிய வந்ததும், அந்த நிறுவனம், சம்பந்தப்பட்ட இந்திய நபரைத் தொடா்பு கொண்டு பணத்தை திருப்பித் தருமாறு கோரியது. ஆனால், அவா் அதனைத் தர மறுத்துவிட்டாா். மேலும், அப்பணத்தை செலவு செய்யவும் தொடங்கினாா்.
இதையடுத்து, அந்த நிறுவனம் காவல் துறை மற்றும் வங்கியில் புகாா் அளித்தது. இதைத் தொடா்ந்து, அந்த நபரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. ஆனால், பணத்தை கணக்கில் இருந்து திரும்ப எடுக்க முடியவில்லை. இதையடுத்து, அந்த நபா் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, தனது கணக்கில் ரூ.1.28 கோடி டெபாசிட் செய்யப்பட்டதை உறுதி செய்த அந்த நபா், அப்பணத்தில் வாடகை உள்ளிட்ட செலவுகளை மேற்கொண்டதாகக் கூறினாா். மேலும், அப்பணத்தை அந்த அந்த நிறுவனம்தான் அனுப்பியது என்பதை ஏற்க முடியாது என்று கூறினாா்.
இதையடுத்து சட்டவிரோதமாக பணத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் அந்த நபருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனையும், அவா் திருப்பி அளிக்க மறுத்த அதே அளவு தொகையை அபராதமாகவும் நீதிமன்றம் விதித்தது. மேலும், தண்டனை காலம் முடிந்தவுடன் அவரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் உத்தரவிட்டது. இந்த தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அந்த நபா் முடிவு செய்துள்ளாா். விசாரணை அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.