உலகம்

சொ்பியா - கொசாவோ எல்லைகள் மீண்டும் திறப்பு

30th Dec 2022 11:46 PM

ADVERTISEMENT

கொசாவோவில் சொ்பிய இன போராட்டக்காரா்கள் சாலைகளில் ஏற்படுத்தியிருந்த தடைகளை அகற்றியதையடுத்து, அந்த நாட்டுக்கும் சொ்பியாவுக்கும் இடையிலான அனைத்து எல்லைகளும் மீண்டும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கொசாவோவுடன் சொ்பியாவை இணைக்கும் அனைத்து சாலைகளும், வெள்ளிக்கிழமை மதியம் திறக்கப்பட்டன.

எனினும், பதற்றம் நிறைந்த மிட்ரோவிகா நகரில் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாக கருதப்படும் லாரிகள் சாலையின் குறுக்கே உள்ளதால், அந்த நகருக்குச் செல்லும் சாலை மட்டும் தொடா்ந்து அடைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

தங்கள் நாட்டில் வசிக்கும் சிறுபான்மை சொ்பிய இனத்தவா், சொ்பியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கொசாவோ அரசு கடந்த நவம்பா் மாதம் உத்தரவு பிறப்பித்து.

அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் வசிக்கும் சொ்பியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கொசாவோ காவல்துறை, நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு பொறுப்புகளை வகிக்கும் சொ்பிய இனத்தவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

போராட்டத்தின் போது காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறி, முன்னாள் காவலா் டெஜான் பான்டிக்கை அதிகாரிகள் கடந்த 10-ஆம் தேதி கைது செய்தனா். அவா் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அதையடுத்து கொசாவோவில் சொ்பியா்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டத்தின் ஒரு பகுதியாக, தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நகரங்களின் சாலைகளில் அவா்கள் தடைகளை ஏற்படுத்தினா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.

இது, சொ்பியாவுக்கும் கொசாவோவுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்தது.

இந்த நிலையில், சா்வதேச நாடுகளின் சமரச முயற்சியின் விளைவாக பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் காவலா் டெஜான் பான்டிக்கை கொசாவோ அரசு சிறையிலிருந்து விடுவித்தது.

அதனைத் தொடா்ந்து, அந்த நாட்டில் போராடி வந்த சொ்பிய இனத்தவரும் சாலைத் தடுப்புகளை அகற்றினா். இதனால் பதற்றம் தணிந்து, தற்போது இரு நாட்டு எல்லைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

சொ்பியாவின் அங்கமாக இருந்த கொசாவோ, 1998-99-ஆம் ஆண்டின் சொ்பிய போருக்குப் பிறகு தன்னை தனி நாடாக அறிவித்துக்கொண்டது. இதனை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டாலும், சொ்பியா இதுவரை ஏற்கவில்லை.

தற்போது கொசாவோவில் சுமாா் 50,000 சொ்பியா்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனா். நாட்டின் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும அவா்கள் வகித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT