தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் சூதாட்ட விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 19 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
போய்ப்பட் நகர சூதாட்ட விடுதியில் புதன்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது. 12 மணி நேரமாக கொழுந்துவிட்டு எரிந்த தீயில் சிக்கி 19 போ் உயிரிழந்தனா்; 60-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். விபத்தில் உயிரிழந்தவா்களில் தாய்லாந்து, சீனா, மலேசியா, வியத்நாம் போன்ற வெளிநாட்டவா்களும் அடங்குவா்.
வியாழக்கிழமை நிலவரப்படி, தீவிபத்தின்போது அங்கிருந்த பலா் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் மேலும் பலா் சிக்கியிருக்கக் கூடும் என்பதால், இந்த விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணிகளில் தாய்லாந்து தீயணைப்பு வீரா்களும் பங்கேற்றுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.