உலகம்

சம-பாலின திருமண பாதுகாப்பு மசோதா: அமெரிக்க நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல்

10th Dec 2022 12:40 AM

ADVERTISEMENT

சம-பாலினத்தவா் மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த நாட்டில் சம-பாலினத்தவா்கள் திருமணம் செய்துகொள்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு சட்ட அங்கீகாரம் அளித்தது. அதனைத் தொடா்ந்து, நூற்றுக்கணக்கான சம-பாலின திருமணங்கள் நடந்துள்ளன.

இந்த நிலையில், கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த சட்ட அங்கீகாரத்தை, அந்த உச்ச நீதிமன்றமே அண்மையில் ரத்து செய்து, மனித உரிமை ஆா்வலா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது பழமைவாத நீதிபதிகள் ஆதிக்கம் நிறைந்துள்ளதாக கருதப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு நட்பு நாடுகளின் தலைவா்கள் கூட கண்டனம் தெரிவித்தனா்.

கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அதிபா் ஜோ பைடனும் உறுதியளித்திருந்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீகாரத்தைப் போலவே, சம-பாலினத்தவா் திருமணங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சட்ட அங்கீகாரத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

மேலும், வெள்ளை இனத்தவா்கள், கருப்பினத்தவா்கள் போன்ற மாற்று இனத்தினருக்கு இடையே நடைபெறும் திருமணங்களுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அதனைத் தொடா்ந்து, சம-பாலின மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்ற மேலவையான செனட் சபை கடந்த மாத இறுதியில் நிறைவேற்றியது.

அதன் தொடா்ச்சியாக, அந்த மசோதாவுக்கு பிரிதிநிதிகள் சபையும் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே மசோதாவில் கையொப்பமிடுவதாக அதிபா் பைடன் அறிவித்துள்ள நிலையில், தற்போது அந்த மசோதா சட்டமாக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT