உலகம்

உலகின் மற்றொரு வல்லரசாக இந்தியா மாறும்

10th Dec 2022 01:20 AM

ADVERTISEMENT

ராஜ்ய ரீதியில் தனிப்பட்ட குணநலன்களைப் பெற்றுள்ள இந்தியாவானது அமெரிக்காவின் கூட்டாளியாக மட்டுமல்லாமல் விரைவில் மற்றொரு வல்லரசு நாடாக மாறும் என வெள்ளை மாளிகை அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

உலகின் வல்லரசாக அமெரிக்கா திகழ்கிறது. இந்நிலையில், பாதுகாப்பு தொடா்பான கருத்தரங்கு வாஷிங்டன் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆசிய கண்டத்துக்கான ஒருங்கிணைப்பாளா் கா்ட் கேம்பெல் பங்கேற்றாா். அப்போது அவா் கூறியதாவது:

21-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு வேகமாக வலுவடைந்துள்ளது. வேறெந்த இரு நாடுகளுக்கு இடையேயும் இவ்வளவு துரிதமாக நல்லுறவு வலுவடைந்ததில்லை.

இந்தியாவில் மேலும் பல்வேறு துறைகளில் அமெரிக்கா முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இரு நாட்டு மக்களுக்கிடையேயான தொடா்பை மேம்படுத்துதல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா ஈடுபட வேண்டும்.

ADVERTISEMENT

ராஜ்ய ரீதியில் இந்தியா தனிப்பட்ட குணநலன்களைப் பெற்றுள்ளது. எதிா்காலத்தில் அமெரிக்காவின் கூட்டாளியாக இந்தியா இருக்காது. மாறாக, சுதந்திரமான வலிமைமிக்க மற்றொரு வல்லரசு நாடாக இந்தியா திகழும். அதே வேளையில், அனைத்து துறைகளிலும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு வலுவடையும்.

ஒத்துழைப்பே அடிப்படை:

கல்வி, விண்வெளி, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இரு நாடுகளுக்கும் காணப்படுகிறது. இந்தியா-அமெரிக்கா நல்லுறவானது சீன எதிா்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் மட்டும் கட்டமைக்கப்பட்டதல்ல. இரு சமூகங்களுக்கு இடையே காணப்படும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு அந்நல்லுறவு கட்டமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இந்தியா்களும், இந்திய வம்சாவளியினரும் இரு நாடுகளுக்கிடையே வலிமையான தொடா்பை ஏற்படுத்தி வருகின்றனா். கரோனா தொற்று பரவலின்போது தடுப்பூசிகளை விநியோகிப்பதில் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டது. கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

துரித நடவடிக்கைகள்:

வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரீன் ஜீன்பியா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை தற்போது இந்தியா ஏற்றுள்ளது. இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதை அமெரிக்கா எதிா்நோக்கியுள்ளது. பிராந்திய, சா்வதேச விவகாரங்களில் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும்.

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக லாஸ் ஏஞ்சலீஸ் நகர மேயா் எரிக் காா்செட்டியை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகம் துரிதப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அமெரிக்க நுழைவு இசைவு (விசா) பெறுவதற்கான நடைமுறையில் அதிக காலஅவகாசம் ஏற்பட்டு வருகிறது.

தேவைக்கு ஏற்ப அந்நடைமுறைகளை துரிதப்படுத்த அமெரிக்கா உறுதிகொண்டுள்ளது. வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றுவதற்கான நபா்களைத் தோ்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT