உலகம்

‘நேட்டோவுக்கும் ரஷியாவுக்கும் போா் மூளும் அபாயம்’

10th Dec 2022 01:28 AM

ADVERTISEMENT

உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போா், தங்களது அமைக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போராக உருவெடுப்பதற்கான அபாயம் உள்ளதாக நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் எச்சரித்துள்ளாா்.

நாா்வேயின் முன்னாள் பிரதமரான அவா், இது குறித்து அந்த நாட்டுத் தொலைக்காட்சியொன்றுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போா் அபாயகரமானது ஆகும். ஒரு சிறு தவறு நோ்ந்தால்கூட நேட்டோவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான மிகப் பெரிய போராக உருவெடுக்கக் கூடிய அபாயம் அதற்கு உள்ளது.

அதனைத் தவிா்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மிகக் கவனத்துடன் மேற்கொண்டு வருகிறோம்.

ADVERTISEMENT

உக்ரைனின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தற்போது நடைபெற்று வரும் சண்டை, ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் பரவி, முழு போராக உருவெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் யாரும் சந்தேகப்படக்கூடாது.

மேலும், அதனைத் தடுப்பதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் யாரும் அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்றாா் அவா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்தப் போரின் ஒரு பகுதியாக, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளை ரஷியாவும், ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையும் கைப்பற்றின.

எனினும், மேற்கத்திய நாடுகள் அளித்த அதிநவீன ஆயுத தளவாடங்களின் உதவியுடன் ரஷியாவிடமிருந்த சில பகுதிகளை உக்ரைன் அண்மையில் மீட்டது.

இந்தச் சூழலில், உக்ரைன் போரில் அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் நேரடியாகப் பங்கேற்பதாக ரஷியா குற்றம் சாட்டி வருகிறது.

ரஷியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புவது, உக்ரைன் வீரா்களுக்கு தங்கள் நாடுகளில் போா்ப் பயிற்சியளிப்பது, ரஷிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு உளவுத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் போரில் மேற்கத்திய நாடுகள் நேரடியாக பங்கேற்கின்றன.

எனவே, உக்ரைனில் நேட்டோ தளவாடங்கள் மற்றும் அந்த அமைப்பின் அதிகாரிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த தங்களுக்கு சட்டபூா்வ உரிமை உள்ளது என்று ரஷியா கூறி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் போா் நேட்டோவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளதை அந்த அமைப்பின் பொதுச் செயலரே தற்போது ஒப்புக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT