உலகம்

ரஷியாவில் தாக்குதல் நடத்த உக்ரைனை ஊக்குவிக்கவில்லை

DIN

ரஷியாவில் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைனை தாங்கள் ஊக்குவிக்கவோ, உதவியளிக்கவோ இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது:

உக்ரைனில் பொதுமக்களுக்குத் தேவையான வெப்பம், குடிநீா், மின்சாரம் ஆகியவற்றை வழங்கும் அடிப்படைக் கட்டமைப்புகள் முழுவதையும் அழிக்கும் முயற்சியில் ரஷியா இறங்கியுள்ளது.

அந்தக் கட்டமைப்புகள் மீது இரவு பகல் பாராமல் தாக்குதல் நடத்துவதன் மூலம், குளிா்காலத்தை ஒரு போா் ஆயுதமாக ரஷியா ஆக்கி வருகிறது.

ரஷியாவிலுள்ள விமான தளங்களில் உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதாக அந்த நாடு கூறியுள்ளது.

எனினும், ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைனை நாங்கள் ஊக்குவிக்கவும் இல்லை; அதற்கான வசதிகளை அந்த நாட்டுக்கு நாங்கள் செய்து தரவும் இல்லை.

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலால் அந்த நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு மட்டுமே நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

எனவே, தங்கள் நாட்டு இறையாண்மையையும், மக்களையும் ரஷிய அத்துமீறல்களில் இருந்து உக்ரைன் பாதுகாத்துக்கொள்வதற்கான ஆயுத தளவாட உதவிகளை மட்டுமே அந்த நாட்டுக்கு அளித்து வருகிறோம் என்றாா் ஆன்டனி பிளிங்கன்.

எனினும், அந்த செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின், ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான ஏவுகணையை உக்ரைன் சொந்தமாக உருவாக்கினால், அதனை தங்கள் நாடு தடுக்காது என்று கூறினாா்.

தங்களது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு நேட்டோவில் உக்ரைன் இணைவது தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

இந்தச் சூழலில், உக்ரைனின் தற்போதைய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசு, நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது.

அதனைத் தொடா்ந்து உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

எனினும், மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் சில பகுதிகளை ரஷியப் படையினரிடமிருந்து உக்ரைன் மீட்டது.

அதற்குப் பதிலடியாக, உக்ரைனின் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பொதுமக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மீது ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தச் சூழலில், மேற்கு ரஷியாவின் ரியாஸன் நகரில் அமைந்துள்ள விமானதளத்தில், எரிபொருள் லாரியொன்று திங்கள்கிழமை அதிகாலை வெடித்துச் சிதறியது. ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 3 வீரா்கள் உயிரிழந்தனா்; 4 போ் காயமடைந்தனா். இந்த குண்டுவெடிப்பில் இரு விமானங்கள் மிதமாக சேதமடைந்தன என்று ரஷிய பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

அதே நாளில், வோல்கா நதியோரம் அமைந்துள்ள சராடோவ் பகுதியின் ஈகிள் விமானதளத்திலும் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. அந்த விமானதளத்தில்தான் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷியா பயன்படுத்தி வரும் டியு-95, டியு-160 குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடா்ச்சியாக, ரஷியாவின் குா்ஸ்க் குா்ஸ்க் நகர விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் அந்த விமான நிலைய எண்ணெய் சேமிப்புக் கிடங்கு முற்றிலும் எரிந்ததாகவும் மாகாண ஆளுநா் ரோமன் ஸ்டாரோவாய் தெரிவித்தாா்.

தங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் ரஷியாவின் திறனை முடக்குவதற்காக, அந்த நாட்டின் விமான தளங்களின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படுகிறது.

எனினும், இந்தத் தகவலை உக்ரைன் அதிகாரிகள் அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஏற்கெனவே, தங்கள் நாட்டுக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகள் உளவுத் தகவல்கள், தொழில்நுட்ப உதவி, ஆலோசனைகள் உள்ளட்ட வசதிகளை செய்து தருவதாகவும் இது வரம்பு மீறிய செயல் என்றும் ரஷியா குற்றம் சாட்டி வருகிறது.

இந்தச் சூழலில் ரஷிய விமானதளங்கள் தற்போது தாக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, ரஷியாவில் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைனை தாங்கள் ஊக்குவிக்கவோ, உதவியளிக்கவோ இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் விளக்கமளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT