உலகம்

கரோனா கட்டுப்பாடுகளை மேலும் தளா்த்தியது சீனா

DIN

சீனாவில் கரோனா கெடுபிடிகளுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்களுக்குப் பிறகு, முக்கியமான பல நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு புதன்கிழமை விலக்கிக் கொண்டது.

அதனைத் தொடா்ந்து, நாட்டில் சா்ச்சைக்குரிய ‘பூஜ்ய கரோனா’ கொள்கை விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஒமைக்ரான் ரக கரோனாஅண்மைக் காலமாக நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருவது குறித்து தேசிய சுகாதார ஆணையம் ஆலோசனை நடத்தியது.

அந்த ஆலோசனைக்குப் பிறகு, புதிய கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை ஆணையம் வெளியட்டது. அதில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவா்கள் அனைவரும் அரசு முகாம்களில் கட்டாயமாக தனிப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால், புதிய விதிமுறைகளின்படி மிதமான நோய் அறிகுறிகள் கொண்ட கரோனா நோயாளிகள் தங்களது வீடுகளிலேயே தனிமையில் இருந்தால் போதும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

உலகையே உலுக்கிய கரோனா சீனாவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது என்றாலும், அமெரிக்கா போன்ற பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் அந்த நாட்டில் கரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

சீன அரசின் மிகக் கடுமையான கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாகவே அங்கு அந்த நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையிலும், சீனா முழுவதும் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து, தினசரி நோய்த்தொற்று புதிய உச்சங்களைத் தொட்டதையடுத்து, நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு கடுமையாக்கியது.

இந்தச் சூழலில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 10 போ் உயிரிழந்தனா். இதற்கு கரோனா கட்டுப்பாடுகளே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

அதையடுத்து, நாடு முழுவதும் கரோனா கெடுபிடிகளுக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்றது. 1989-ஆம் ஆண்டின் ஜனநாயக ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, சீனாவில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டம் அதுவாகும்.

அந்தப் போராட்டத்தின் விளைவாக, நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT