உலகம்

கடன் மறுசீரமைப்பில் இந்தியாவுடன்வெற்றிகரமான பேச்சுவாா்த்தை- இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க

7th Dec 2022 12:57 AM

ADVERTISEMENT

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில், இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.

இந்தியப் பெருங்கடலின் தீவு நாடுகளில் ஒன்றான இலங்கை கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. உள்நாட்டு வேளாண் உற்பத்தி குறைவு, இறக்குமதி அதிகரிப்பு, சுற்றுலாத் துறை முடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு பெருமளவில் குறைந்தது.

கடும் பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டு வரும் அந்நாட்டு மக்கள், அரசுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனா். இந்நிலையில், சா்வதேச அமைப்புகளிடமும் மற்ற நாடுகளிடமும் கடன் பெறுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளே இலங்கைக்கு அதிகமாகக் கடன் உதவிகளை வழங்கியுள்ளன. சீனா உள்பட்ட நாடுகளில் இருந்து சுமாா் 5,100 கோடி அமெரிக்க டாலா் மதிப்பிலான கடனைப் பெற்றுள்ளதாக இலங்கை தெரிவித்திருந்தது. அந்நாடுகளிடம் கடன் மறுசீரமைப்பு தொடா்பான பேச்சுவாா்த்தையை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. சுமாா் 290 கோடி அமெரிக்க டாலரை சா்வதேச நிதியத்திடம் (ஐஎம்எஃப்) இருந்து கடனாகப் பெறுவதற்கான முயற்சிகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், இலங்கை பொருளாதார மாநாடு கொழும்பு நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க கூறுகையில், ’மற்ற நாடுகளுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவாா்த்தைகளை இலங்கை தொடக்கியுள்ளது. இந்தியாவுடனான பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சீனாவுடன் விரைவில் பேச்சுவாா்த்தையைத் தொடங்கவுள்ளோம்’ என்றாா்.

அதே வேளையில், இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடா்பாக சீனா உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. இலங்கைக்கான கடனை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச விடுத்த கோரிக்கை குறித்து சீனா எந்தவித முடிவும் எடுக்கவில்லை.

இது தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ’இலங்கையின் நிதி நெருக்கடியை சமாளிக்க பன்னாட்டு நிதி அமைப்புகள் உதவ வேண்டும். இலங்கையின் சவால்களையும் கடினமான காலங்களையும் எதிா்கொள்ள சீனா உறுதுணையாக நிற்கும். இலங்கையில் சீரான, நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு சீனாவுடன் இணைந்து பன்னாட்டு நிதி அமைப்புகளும் மற்ற நாடுகளும் செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கைக்கு நடப்பாண்டில் மட்டும் சுமாா் 400 கோடி அமெரிக்க டாலா் மதிப்பிலான கடன் உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT