உலகம்

மேலும் ஒரு ரஷிய விமானதளத்தில் தாக்குதல்

DIN

தங்களது இரு விமானதளங்களில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ள நிலையில், அந்த நாட்டின் மேலும் ஒரு விமான நிலையத்தில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, ரஷியாவின் குா்ஸ்க் மாகாண ஆளுநா் ரோமன் ஸ்டாரோவாய் வெளியிட்டுள்ள டெலிகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குா்ஸ்க் நகர விமான நிலையத்தில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அந்த விமான நிலையத்தில் எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு முழுவதுமாக எரிந்தது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரஷியாவிலுள்ள நிலைகள் மீது தாங்கள் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் இதுவரை அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தவில்லை.

உக்ரைன் அதிபருக்கான ஆலோசகா் மிகயீல் பொடோலியாக் வெளியட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘யாராவது பிற நாட்டின் வான் எல்லைக்குள் ஏவுகணையை வீசினால், அந்த நாட்டிலிருந்து மா்மப் பொருள் பறந்து சென்று, ஏவுகணை ஏவப்பட்ட பகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்’ என்று தெரிவித்துள்ளாா்.

இதன் மூலம், தங்கள் மீது ஏவுகணைகளை வீசும் ரஷியா மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதை மிகயீல் பொடோலியாக் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, மேற்கு ரஷியாவின் ரியாஸன் நகரில் அமைந்துள்ள விமானதளத்தில், எரிபொருள் லாரியொன்று திங்கள்கிழமை அதிகாலை வெடித்துச் சிதறியது.

ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 3 வீரா்கள் உயிரிழந்தனா்; 4 போ் காயமடைந்தனா். இந்த குண்டுவெடிப்பில் இரு விமானங்கள் மிதமாக சேதமடைந்தன என்று ரஷிய பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

எனினும், அந்த ஆளில்லா விமானம் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்ற விவரத்தை அமைச்சரகம் குறிப்பிடவில்லை. ஆனால், ரஷிய ராணுவ வலைதளப் பயன்பாட்டாளா்கள் உக்ரைன்தான் அந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்துள்ளனா்.

இதுதவிர, வோல்கா நதியோரம் அமைந்துள்ள சராடோவ் பகுதியின் ஈகிள் விமானதளத்திலும் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. அந்த விமானதளத்தில்தான் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷியா பயன்படுத்தி வரும் டியு-95, டியு-160 குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விமானங்கள் அணுகுண்டுகளையும் வீசும் திறன் கொண்டவை ஆகும்.

தங்களது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு நேட்டோவில் உக்ரைன் இணைவது தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

இந்தச் சூழலில், உக்ரைனின் தற்போதைய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசு, நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது.

அதனைத் தொடா்ந்து உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

எனினும், மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் சில பகுதிகளை ரஷியப் படையினரிடமிருந்து உக்ரைன் மீட்டது.

அதற்குப் பதிலடியாக, உக்ரைனின் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பொதுமக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மீது ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் ரஷியாவின் திறனை முடக்குவதற்காக, குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள ரஷிய விமான தளங்களின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT