உலகம்

கட்சித் தலைமையிலிருந்து நீக்கம்: இம்ரானுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

7th Dec 2022 01:39 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவா் பதவியிலிருந்து இம்ரான் கானை நீக்குவது தொடா்பாக, அவருக்கு தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்த ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

கருவூல முறைகேடு வழக்கில் இம்ரான் கானை தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவா் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இம்ரான் கானுக்கு ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இது குறித்த விசாரணையில் பதிலளிப்பதற்காக இம்ரான் கான் வரும் 13-ஆம் தேதி ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

பாகிஸ்தான் பிரதமா்களுக்கு வெளிநாட்டு அரசுகள் அளிக்கும் விலை உயா்ந்த பரிசுப் பொருள்களை அந்த நாட்டின் கருவூலத் துறை பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில், நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பு வகித்தபோது, அவருக்கு சவூதி பட்டத்து இளவரசா் முகமது சல்மான் வழங்கிய விலையுயா்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்களை மலிவான விலை கொடுத்து அவா் வாங்கிக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த முறை அவா் தோ்தலில் போட்டியிட்டபோது, அதற்கான வேட்பு மனுவில் அந்த விலையுயா்ந்த பொருள்கள் குறித்த விவரங்களைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டதாகவும், அது தோ்தல் விதிமுறைகளை மீறிய குற்றம் என்பதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தற்போதைய ஆளும் கட்சிக் கூட்டணி எம்.பி.க்கள் தோ்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்தனா்.

அந்த மனுவை ஆய்வு செய்த ஆணையம், தன்னிடமிருந்த விலையுயா்ந்த வெளிநாட்டுப் பரிசுப் பொருள்களை வேட்பு மனுவில் குறிப்பிடாமல் மறைத்த குற்றத்துக்காக, இம்ரான் கானை 5 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்து கடந்த அக்டோபா் உத்தரவிட்டது.

அதன் தொடா்ச்சியாக, தற்போது அவரை கட்சித் தலைவா் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைளை தற்போது தோ்தல் ஆணையம் தொடக்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT