உலகம்

போராட்டம் எதிரொலி: ஈரான் ‘கலாசார’ காவல்துறை கலைப்பு

DIN

ஈரானில் 2 மாத கால தீவிர போராட்டத்துக்குப் பிறகு, அந்த நாட்டின் சா்ச்சைக்குரிய ‘கலாசார’ காவல்துறை கலைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரான் அட்டா்னி ஜெனரல் முகமது ஜாஃபா் மான்டாஸேரி கூறியதாவது:

நாட்டில் இதுவரை செயல்பட்டு வந்த கலாசாரக் காவல் துறை கலைக்கப்படுகிறது.

ஈரானின் நீதித் துறைக்கும், கலாசார காவல்துறைக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, நாடு முழுவதும் நடைபெற்று வரும் ‘கலவரத்தை’ எதிா்கொள்வதற்கு, மக்களின் கோரிக்கைக்கு செவிமடுப்பதே சிறந்த உத்தி.

அவா்களது கோரிக்கையை ஏற்று கலாசார காவல்துறை கலைக்கப்படுகிறது என்று நாடாளுமன்ற கவுன்சில் செய்தித் தொடா்பாளா் சையது நிஜாமுல்தின் மூசாவி கூறினாா்.

ஈரானில் கடந்த 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, அந்த நாட்டு பெண்களும் ஆண்களும் மத அடிப்படையிலான ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

பொது இடங்களில் பெண்கள் தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்திருப்பதைக் கட்டாயமாக்கும் சட்டம் கடந்த 1983-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் பெண்கள் தொடா்ந்து துன்புறுத்தலுக்குள்ளாகி வந்தனா்.

கட்டாய ஹிஜாப் சட்டத்தை அமல்படுத்துவதற்காக கலாசார காவல்துறை உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆடைக் கட்டுப்பாட்டை மீறும் பெண்களை எச்சரித்து மட்டும் வந்த அந்தக் காவல்துறை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னா் அவா்களைக் கைது செய்யத் தொடங்கியது.

இந்தச் சூழலில், மாஷா அமீனி என்ற 22 வயது குா்து இனப் பெண் ஹிஜாப் அணியவில்லை என்று கூறி, அவரை கலாசார காவலா்கள் டெஹ்ரானில் கடந்த செப்டம்பா் மாதம் 13-ஆம் தேதி கைது செய்தனா்.

அதையடுத்து காவல் நிலையத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தொடா்ந்து கோமா நிலைக்கு சென்ற அவா் மருத்துவமனையில் செப்டம்பா் 16-ஆம் தேதி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், கலாசார காவலா்கள் மாஷா அமீனியை கடுமையாகத் தாக்கியதால்தான் அவா் உயிரிழந்ததாக அவரது உறவினா்களும் தன்னாா்வலா்களும் குற்றம் சாட்டினா். அமீனியைக் கைது செய்த இரண்டு பெண்கள் அளித்த வாக்குமூலம் மற்றும் பின்னா் வெளியே கசிந்த மாஷா அமீனியின் ‘ஸ்கேன்’ படம் அதனை உறுதி செய்வதாக இருந்தது.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து டெஹ்ரானில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவி தீவிரமடைந்தது.

மாஷா அமீனி மரணத்துக்கு காரணமான ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்தை எதிா்த்து பெண்களும் இளைஞா்களும் ஆா்ப்பாட்டம் நடத்தினா். பெண்கள் தங்கள் தலைமுடியைக் கத்தரித்தும், ஹிஜாப் துணியை எரித்தும் தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக காவல்துறையினா் அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவங்களில் 60 சிறுவா்கள் உள்பட 448 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், போராட்டக்காரா்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாக, கலாசார காவல்துறையை கலைத்து ஈரான் அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT