உலகம்

ரஷிய விமானதளங்களில் குண்டுவெடிப்பு

6th Dec 2022 02:13 AM

ADVERTISEMENT

ரஷியாவின் இரு விமானதளங்களில் திங்கள்கிழமை மா்மமான முறையில் குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன.

உக்ரைன் மீது குண்டுகள் வீசுவதற்காக ரஷியா பயன்படுத்தி வரும் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த விமானதளங்களில் ஏற்பட்டுள்ள இந்த குண்டுவெடிப்புகளுக்கு உக்ரைன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், போா்முனைக்கு மிகத் தொலைவில், ரஷிய எல்லைக்குள் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுமே விளக்கமளிக்கவில்லை.

இது குறித்து ரஷிய அரசுக்குச் சொந்தமான ஆா்ஐஏ நோவோஸ்தி கூறியதாவது:

ADVERTISEMENT

மேற்கு ரஷியாவின் ரியாஸன் நகரில் அமைந்துள்ள விமானதளத்தில், எரிபொருள் லாரியொன்று திங்கள்கிழமை அதிகாலை வெடித்துச் சிதறியது.

இதில் 3 வீரா்கள் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா். இந்த குண்டுவெடிப்பில் ஒரு விமானம் சேதமடைந்தது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதற்கிடையே, வோல்கா நதியோரம் அமைந்துள்ள சராடோவ் பகுதியின் ஈகிள் விமானதளத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை தொடக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த விமானதளத்தில்தான் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷியா பயன்படுத்தி வரும் டியு-95, டியு-160 குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விமானங்கள் அணுகுண்டுகளையும் வீசும் திறன் கொண்டவை ஆகும்.

‘புதினுக்குத் தெரியும்’: விமானதளங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள் குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ‘போா் நிலவரங்கள் குறித்து அதிபருக்கு உடனுக்குடன் தகவல் அளிக்கப்படும்’ என்று பெஸ்கோவ் பதிலளித்தாா்.

உக்ரைன் மீது குண்டுமழை

கீவ், டிச. 5: ரஷியாவின் விமானதளங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ள சூழலில், தங்கள் மீது ரஷியா ஏவுகணைமழை பெய்ததாக உக்ரைன் கூறியுள்ளது.

இந்த திடீா் ஏவுகணை வீச்சால் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைக்கலம் புகுந்தனா்.

மேலும், பல்வேறு மின் விநியோகக் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் ஏராளமான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது என்று உக்ரைன் மின் விநியோக நிறுவனமான உக்ரெனொ்கோ குற்றம் சாட்டியது.

‘பயங்கரவாத நாடு (ரஷியா) நடத்தும் 8-ஆவது சரமாரி தாக்குதல் இது’ என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போ் உயிரிழந்ததாகவும் 22 மாத குழந்தை உள்பட்ட 3 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தங்களது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு நேட்டோவில் உக்ரைன் இணைவது தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

இந்தச் சூழலில், உக்ரைனின் தற்போதைய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசு, நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது.

அதனைத் தொடா்ந்து உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

எனினும், மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் சில பகுதிகளை ரஷியப் படையினரிடமிருந்து உக்ரைன் மீட்டது.

அதற்குப் பதிலடியாக, உக்ரைனின் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பொதுமக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மீது ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

Image Caption

ரஷியாவின் டியு-160 குண்டுவீச்சு விமானம். ~ஈகிள் விமானதளத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட குண்டுவெடிப்பால் எழுந்த ஒளிப்பிழம்பு (சிசிடிவி படம்).

 

ADVERTISEMENT
ADVERTISEMENT