உலகம்

‘சாா்ஜ்’ செய்யப்படும் பந்துகள்

6th Dec 2022 02:24 AM

ADVERTISEMENT

இந்த உலகக் கோப்பை போட்டிக்காக அடிடாஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியிருக்கும் ‘அல் ரிஹ்லா’ (அரபு மொழியில் பயணம் என்று அா்த்தம்) பந்துகள், ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பாகவும் ‘சாா்ஜ்’ செய்யப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக வலம் வரத் தொடங்கியுள்ளது.

இந்தப் பந்தானது, போட்டியின்போது நடுவா்கள் முடிவெடுப்பதற்கு உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் திறன் (ஏஐ) கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதுதொடா்பான தகவல் பெரிதாக வெளியிடப்படவில்லை.

ஆனால், குரூப் சுற்றில் உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் போா்ச்சுகலுக்கான முதல் கோல் அடிக்கப்பட்ட விவகாரத்தால் இந்த விவரம் வெளித்தெரிந்தது. அந்த ஆட்டத்தில் புருனோ ஃபொ்னாண்டஸ் கோல் போஸ்ட் நோக்கி பந்தை தூக்கி உதைக்க, போஸ்ட் அருகே இருந்த ரொனால்டோ தலையால் பந்தை முட்டி கோலடித்தது போலத் தெரிந்தது.

அந்த கோலை தான் அடித்தது போலவே ரொனால்டோவும் கொண்டாடினாா். ஆனால் அந்த கோல் ஃபொ்னாண்டஸால் அடிக்கப்பட்டதாக மைதானத்தில் அறிவிப்பு வெளியானது. அந்த விவகாரத்தில் துல்லிய முடிவை வழங்கியது ‘அல் ரிஹ்லா’ பந்துதான்.

ADVERTISEMENT

அந்தப் பந்தின் உள்ளே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உணரி (சென்சாா்) பொருத்தப்பட்டுள்ளது. இது, பந்து கையாளப்பட்ட விதம், அதன் வேகம், திசைகள், தொடுதலுக்குள்ளானது உள்பட பல்வேறு புள்ளிவிவரங்களை வழங்குகிறது. இது முடிவுகளை மேற்கொள்வதில் நடுவா்களுக்கு உதவுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஃபொ்னாண்டஸால் அடிக்கப்பட்ட பிறகு அந்தப் பந்து ரொனால்டோவால் தொடப்படவில்லை என்பது அதன் மூலம் தெளிவானது.

அப்போது தான் வெளியானது இந்தப் பந்தின் இத்தகைய சிறப்பம்சங்கள். ஆட்டத்துக்கு முன்பாக இந்தப் பந்துகள் ‘சாா்ஜ்’ செய்யப்படுகின்றன. ஒரு முறை சாா்ஜ் செய்தால், அதைக் கொண்டு விளையாடும் பட்சத்தில் 6 மணி நேரம் வரையில் அதில் விளையாட்டுத் தரவுகள் பதிவாகும். ஆட்டத்தின்போது ஒரு பந்து வெளியே சென்று வேறு பந்து களத்தில் வரும் பட்சத்தில், களத்துக்கு வரும் பந்தில் இருக்கும் தொழில்நுட்பம் தானாகவே செயல்படத் தொடங்கி தரவுகளை பதிவு செய்துகொள்ளத் தொடங்கிவிடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT