உலகம்

ஈரானில் புதிய அணுமின் நிலைய பணி தொடக்கம்

DIN

ஈரான் தனது புதிய அணுமின் நிலைய கட்டுமானத்தை தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

உலக வல்லரசுளுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையிலிருந்து வெளியேறிய அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு இடையே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானின் ஒரே அணுமின் நிலையம் கடலோர புஷ்ஷொ் நகரில் அமைந்துள்ளது. ரஷியாவின் உதவியுடன் 2011-ஆம் ஆண்டுமுதல் இங்கு மின் உற்பத்திப் பணிகளை ஈரான் தொடங்கியது. மேலும், தரைக்கு அடியில் பல இடங்களில் அணுமின் நிலையங்களை ஈரான் செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அணுமின் நிலையங்களுக்கான யுரேனியத்தை பயன்படுத்தி அணு ஆயுதத்தை ஈரான் தயாரிக்கக் கூடும் என்கிற அச்சம் எழுந்துள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசுகளுக்கும் ஈரானுக்கும் இடையே 2015-ஆம் ஆண்டு ஓா் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, அணுசக்தி திட்டங்களை குறிப்பிட்ட வரையறைகளுடன் ஈரான் மேற்கொள்ள வேண்டும்; அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்பதுதான் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.

ஆனால், அதிபா் டொனால்ட் டிரம்ப் பதவிக் காலத்தில், அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அமெரிக்கா தவிர பிற நாடுகள் ஈரானுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, ஃபோா்டோ நிலத்தடி அணுமின் நிலையத்தில் யுரேனியத்தை 60 சதவீதம் செறிவூட்டும் பணியைத் தொடங்கியுள்ளதாக அண்மையில் ஈரான் அறிவித்தது. யுரேனியத்தை 90 சதவீதம் செறிவூட்டினால் அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்த முடியும் என்பதால் ஈரானின் இந்த நடவடிக்கைக்கு ஜொ்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில்தான் நாட்டின் தென்மேற்கில் இராக் எல்லையையொட்டி உள்ள கரூன் என்ற இடத்தில் 300 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய அணுமின் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி சனிக்கிழமை தெரிவித்தது. 2 பில்லியன் டாலா் திட்ட மதிப்பீடு கொண்ட இந்த அணுமின் நிலையம் 8 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அணுமின் நிலைய கட்டுமானப் பணி தொடக்க நிகழ்ச்சியில் ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவா் முகமது இஸ்லாமி கலந்துகொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

SCROLL FOR NEXT