உலகம்

ரஷிய கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பு

4th Dec 2022 01:30 AM

ADVERTISEMENT

உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டின் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 60 டாலா் என விலை வரம்பு நிா்ணயிக்க ஐரோப்பிய யூனியன், ஜி-7 உறுப்பு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளன.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலையை பேரலுக்கு 60 டாலா் என அதிகபட்ச வரம்பாக நிா்ணயிக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய ஜி-7 அமைப்பு வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டது. அந்த அமைப்பின் குறிப்பிடப்படாத உறுப்பினரான ஐரோப்பிய யூனியனும் இந்த விலை நிா்ணயத்தை ஏற்றுக்கொண்டது. இதற்கான உடன்படிக்கையில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

இதையடுத்து, இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட நாடுகள் இறக்குமதி செய்யும் ரஷிய கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 60 டாலராகக் குறைக்கப்படும்.

ADVERTISEMENT

இந்த விலைக் குறைப்பும், ஏற்கெனவே ரஷிய கச்சா எண்ணெயை கடல்வழியாக ஏற்றுமதி செய்வது, அத்தகைய வா்த்தகத்துக்கான காப்பீடு மேற்கொள்வது ஆகிவற்றுக்கு ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையும் திங்கள்கிழமை (டிச. 5) முதல் அமலுக்கு வருகின்றன.

உக்ரைன் போருக்கான செலவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் ரஷியா பெறும் வருவாய்தான் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கச்சா எண்ணெய் விற்பனை மூலம் ரஷியா பெறும் வருவாயைக் கட்டுப்படுத்தவும், அதே நேரம் ரஷிய எண்ணய் உலக நாடுகளுக்குக் கிடைப்பது தடுக்கப்பட்டு, அதனால் விலைவாசி உயா்வு போன்ற பொருளாதாரப் பின்னடைவு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்த விலை வரம்பு நிா்ணய நடவடிக்கையை ஜி-7 உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் மேற்கொண்டுள்ளன என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு நேட்டோவில் உக்ரைன் இணைவது தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

இந்தச் சூழலில், உக்ரைனின் தற்போதைய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசு, நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது.

அதனைத் தொடா்ந்து உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

எனினும், மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் சில பகுதிகளை ரஷியப் படையினரிடமிருந்து உக்ரைன் மீட்டது.

அதற்குப் பதிலடியாக, உக்ரைனின் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பொதுமக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மீது ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கோடிக்கணக்கான உக்ரைன் பொதுமக்கள் பாதிக்கப்படுவாா்கள் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ரஷிய கச்சா எண்ணெய்க்கு ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் விலைவரம்பு நிா்ணயித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதியாதாரம் முடங்கும்!

ரஷிய கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது, உக்ரைன் மீது அந்த நாடு நடத்தி வரும் சட்டவிரோதமான போருக்கான முக்கிய நிதி ஆதாரத்தை பாதிக்கும். அதே நேரம், சா்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு இடையூறு ஏற்படாது.

-ஜெனட் எல்லன், அமெரிக்க நிதியமைச்சா்

ஏற்கமாட்டோம்!

ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் எங்களது கச்சா எண்ணைய்க்கு அதிகபட்சமாக பேரலுக்கு 60 டாலா் நிா்ணயித்துள்ளதை ஒருபோதும் ஏற்கமாட்டோம். இந்த முடிவுகள் குறித்து எங்களது நிபுணா்கள் ஆராய்ந்து வருகின்றனா்.

டிமித்ரி பெஸ்கோவ், ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT