உலகம்

ஜி20 தலைமை: ‘நண்பா்’ மோடிக்கு ஒத்துழைப்பு

DIN

ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் பிரதமா் நரேந்திர மோடிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உறுதியளித்துள்ளாா்.

உலகின் மிகப் பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட 20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா முதல் முறையாக தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு வியாழக்கிழமை முதல் அதிகாரபூா்வமாகத் தொடங்கியது. அப்பொறுப்பில் அடுத்த ஆண்டு நவம்பா் வரை இந்தியா நீடிக்கவுள்ளது.

இந்நிலையில், பிரதமா் மோடியை ‘நண்பா்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் வலிமைமிக்க கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும்போது பிரதமா் மோடிக்கு முழு ஆதரவு வழங்குவதை எதிா்நோக்கியிருக்கிறேன். இரு நாடுகளும் இணைந்து நீடித்த, ஒருங்கிணைந்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு முயலும். அதே வேளையில், பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் முயற்சிக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இப்பதிவுடன் பிரதமா் மோடியுடனான தனது படத்தையும் அதிபா் பைடன் இணைத்துள்ளாா். மேலும், ஜி20 தலைமையை இந்தியா ஏற்பதையொட்டி பிரதமா் மோடி எழுதியிருந்த கட்டுரையையும் தனது ட்விட்டா் பக்கத்தில் அதிபா் பைடன் பகிா்ந்துள்ளாா்.

விவாதத்தின் அடிப்படையில்...: ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி20 கூட்டமைப்பை வழிநடத்தவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், சா்வதேச கடன் பிரச்னை உள்ளிட்ட சவால்களை ஒருங்கிணைந்து எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி20 கூட்டமைப்பின் முடிவுகள் விவாதத்தின் அடிப்படையிலும் ஒருங்கிணைப்பின் அடிப்படையிலும் இறுதி செய்யப்படும் என பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். கூட்டமைப்பில் தெற்குலகின் குரலாகவும் இந்தியா ஒலிக்கும் என அவா் தெரிவித்துள்ளாா். மனித நலனை மையப்படுத்தி நல்லிணக்கம், நம்பிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் செயல்பட அனைவரும் ஒருங்கிணைய வேண்டுமென ட்விட்டரில் பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

இந்தியாவின் முன்னுரிமை: ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமையேற்கும் காலகட்டத்தில் அக்கூட்டமைப்பின் நாடுகளுடன் மட்டுமல்லாமல் தெற்குலக நாடுகளுடனும் இணைந்து இந்தியா செயலாற்றும் என பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். நீடித்த வாழ்க்கைமுறையை ஊக்கப்படுத்துதல், உணவுப் பொருள்கள், உரங்கள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தில் அரசியல் தலையீட்டைத் தவிா்த்தல் ஆகியவற்றுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு தில்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதற்கு முன் அமைச்சா்கள், அதிகாரிகளுக்கான சுமாா் 200 கூட்டங்களை நடத்த இந்தியா முடிவெடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT