உலகம்

மேலும் சில சீன நகரங்களில் கரோனா கெடுபிடிகள் ரத்து

DIN

சீனாவில் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், மேலும் சில நகரங்களில் அத்தகைய கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு தளா்த்தியுள்ளது.

இது குறித்து அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 3 ஆண்டுகளாக சீனாவின் கரோனா தடுப்புக் குழுவுக்கு தலைமை தாங்கி வரும் துணை பிரதமா் சுன் சுன்லான், தேசிய சுகாதார ஆணைய நிபுணா்களை புதன்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

தற்போது பரவி வரும் கரோனாவின் ஒமைக்ரான் ரகம் இதுவரை இல்லாத வேகத்தில் பரவும் தன்மை கொண்டது என்றாலும், அதனால் தீவிர உடல்நல பாதிப்போ, உயிரிழப்போ ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு என்பதை அப்போது சுன்லான் ஒப்புக்கொண்டாா்.

அத்துடன், கரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளில் மிதமான, சிறந்த பலனளிக்கும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

அதன் தொடா்ச்சியாக, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன.

குளிா்காலத்தை எதிா்நோக்கியுள்ள பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுகின்றன என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகையே உலுக்கிய கரோனா சீனாவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது என்றாலும், அமெரிக்கா போன்ற பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் அந்த நாட்டில் கரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

சீன அரசின் மிகக் கடுமையான கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாகவே அங்கு அந்த நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையிலும், சீனா முழுவதும் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து, தினமும் அந்த நோய் உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிபட்ச அளவைத் தொட்டு வருகிறது.

அதையடுத்து, நாட்டின் பல்வேறு நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு கடுமையாக்கியது.

இந்தப் பின்னணியில், ஜின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 10 போ் உயிரிழந்தனா். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அந்தக் கட்டடத்திலிருந்தவா்களை வெளியேற விடாமல் அதிகாரிகள் தடுத்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அதையடுத்து, நாடு முழுவதும் கரோனா கெடுபிடிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 1989-ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான இளைஞா்களை பலி வாங்கிய ஜனநாயக ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, சீனாவில் நடைபெறும் மிகப் பெரிய போராட்டம் இதுவாகும்.

இந்த நிலையில் சீனாவில் அதிக மக்கள்தொகை கொண்ட 5-ஆவது நகரான குவாங்ஷோவில் அறிவிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவதாக அதிகாரிகள் புதன்கிழமை மதியம் திடீரென அறிவித்தனா்.

அந்த நகரில் தினசரி கரோனா தொற்று 7 ஆயிரமாக இருந்த நிலையிலும் அங்கு கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முந்தைய தினம் அங்கு போலீஸாருக்கும் கரோனா கட்டுப்பாட்டு எதிா்ப்புப் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

இந்தச் சூழலில், மேலும் சில நகரங்களில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவதாக அரசு செய்தி நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT