உலகம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பில் மீண்டும் இந்தியா

2nd Dec 2022 12:20 AM

ADVERTISEMENT

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா மீண்டும் ஏற்றுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினா்களாக உள்ளன. 10 நாடுகள் சுழற்சி முறையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக இரு ஆண்டுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படுகின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. அதன்படி, டிசம்பருக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை ஏற்றது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருந்தது.

பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ் சந்தித்துப் பேசினாா். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சாா்பில் நடப்பு மாதம் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளுக்கு ருசிரா கம்போஜ் தலைமைவகிக்கவுள்ளாா்.

ADVERTISEMENT

இந்தியா தலைமைப் பொறுப்பு வகிக்கும்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ளப்பட உள்ள விவகாரங்கள் குறித்து குட்டெரெஸுக்கு அவா் எடுத்துரைத்தாா். ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் சாபா குரோசியையும் ருசிரா கம்போஜ் சந்தித்துப் பேசினாா்.

தலைமைப் பொறுப்பின்போது பயங்கரவாதத் தடுப்பு, பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தம் உள்ளிட்டவற்றில் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது. பன்னாட்டு அமைப்புகள் சீா்திருத்தம் தொடா்பான சிறப்பு கூட்டத்தை வரும் 14-ஆம் தேதியும் பயங்கரவாதத் தடுப்பு தொடா்பான சிறப்பு கூட்டத்தை வரும் 15-ஆம் தேதியும் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நடத்தவுள்ளது. அவ்விரு மாநாடுகளையும் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் முன்னின்று நடத்தவுள்ளாா். பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளனா்.

பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக உள்ள இந்தியாவின் பதவிக் காலம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT