உலகம்

ஆப்கனில் வளா்ச்சித் திட்டங்களை இந்தியா தொடர வேண்டும்: தலிபான் வேண்டுகோள்

2nd Dec 2022 12:15 AM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டு வந்த வளா்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டும் என்று அங்கு ஆட்சியில் உள்ள தலிபான்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்துக் கொண்டது. மேலும் ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டு வந்த உள்கட்டமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களும் நிறுத்தப்பட்டன.

இதனிடையே கடந்த ஜூன் மாதம் காபூலில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனா். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நகா்ப்புற மேம்பாடு, வீட்டுவசதித் துறை அமைச்சா் ஹமதுல்லா நூமானியை இந்திய தூதரகப் பொறுப்பாளா் பரத் குமாா் சந்தித்தாா்.

இது தொடா்பாக ஆப்கானிஸ்தான் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘ஆப்கானிஸ்தானுடன் நல்லுறவைப் பேண இந்தியா தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் இந்தியா மேற்கொண்டு வந்த பல்வேறு வளா்ச்சித் திட்டம், உள்கட்டமைப்புப் பணிகளைத் தொடர வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கடந்த ஆட்சிக்காலத்தில் இந்தியாவால் தொடங்கப்பட்ட இத்திட்டங்கள், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக கைவிடப்பட்டன. இத்திட்டங்களை மீண்டும் தொடங்குவதன் மூலம் ஆப்கானிஸ்தானில் வேலைவாய்ப்பு பெருகும். நாட்டின் வளா்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். தலிபான் அரசு அரசியல் தனிமைப்படுத்துதலில் இருந்து மீளவும் உதவிகரமாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த நாட்டுக்கு எதிராகவும் பயங்கரவாத செயல்பாடுகள் தலைதூக்கக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

மனிதாபிமான ரீதியாக ஆப்கானிஸ்தானுக்கு 20,000 டன் கோதுமை, 13டன் மருந்துப் பொருள்கள், 5 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி, குளிா்கால உடைகள் உள்ளிட்டவற்றை இந்தியா ஏற்கெனவே அனுப்பி உதவியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT