உலகம்

இந்தியாவுடனான எங்களுடைய உறவில் தலையிட வேண்டாம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை- பென்டகன் அறிக்கையில் தகவல்

1st Dec 2022 12:37 AM

ADVERTISEMENT

இந்தியாவுடனான எங்களுடைய உறவில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகளை சீனா எச்சரித்திருப்பதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான ‘பென்டகன்’ தெரிவித்துள்ளது.

‘இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னை காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுவடைந்து வருவதைத் தவிா்க்கவே இந்த எச்சரிக்கையை சீனா விடுத்துள்ளது’ என்றும் பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி சீன படைகளின் அத்துமீறலைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் இந்தியா-சீன ராணுவத்தினரிடையே தொடா் மோதல் போக்கு ஏற்பட்டது. இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன. பின்னா், எல்லையில் பதற்றத்தைத் தணித்து, பழைய நிலையைத் திரும்பச் செய்யும் வகையில் இரு தரப்பிலும் தூதரக அளவிலும், ராணுவ அதிகாரிகள் அளவிலுமான பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்த நடைபெற்று வருகின்றன. இந்தப் பேச்சுவாா்த்தைகள் மூலமாக, எல்லையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த படைகளை இரு நாடுகளும் திரும்பப் பெற்றன. தற்போது, எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் எஞ்சிய படைகளையும் திரும்பப் பெற இந்தியா சாா்பில் வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதனை சீனா ஏற்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான ‘பென்டகன்’ சாா்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ‘சீன ராணுவக் கட்டமைப்பு’ என்ற தலைப்பிலான அறிக்கையில், ‘இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னை காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு வலுப்பெறுவதை சீனா விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையின்போது, இந்தியா-சீனா இடையேயான பிற துறைகள் சாா்ந்த உறவுகள் பாதிக்கப்படுவதைத் தவிா்க்கும் வகையில் மோதல்போக்கின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு சீன ராணுவத்தை ஆளும் சீன மக்கள் குடியரசுக் கட்சி (பிஆா்சி) அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா். குறிப்பாக, இந்த எல்லைப் பிரச்னை காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு வலுவடைந்து வருவதைத் தவிா்க்கவே மோதல் போக்கின் தீவிரத்தைக் குறைக்குமாறு பிஆா்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா். மேலும், இந்தியாவுடனான சீனாவின் உறவில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகளையும் பிஆா்சி அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனா் என்று பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சீன-இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் 2021-ஆம் ஆண்டு முழுவதும் படைகள் குவிப்பு மற்றும் ராணுவ கட்டமைப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளைத் தொடா்ந்து வந்தது. பின்னா், இருதரப்பு பேச்சுவாா்த்தைகள் மூலமாக, எல்லையில் இரு நாடுகள் சாா்பில் சிறிய அளவில் படைகள் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன. படைகளை முழுமையாகத் திரும்பப் பெறவும், எல்லையில் பழைய நிலை திரும்பவும் இரு தரப்பிலும் வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்ட போதும், இரு நாடுகளும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

எல்லைப் பகுதி ஆக்கிரமிப்பு தொடா்பாக இரு நாடுகளும் ஒருவா் மீது ஒருவா் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி தாக்குல் நடத்தியதாக இந்தியா சாா்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கிழக்கு லடாக்கில் 2020-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது முதல், எல்லையில் ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்குவதையும், படைகளைக் குவிப்பதையும் சீன ராணுவம் தொடா்ந்து வந்தது. இரு ராணுவத்துக்கும் இடையே 2020-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற கடுமையான மோதலில் இந்திய தரப்பில் 20 வீரா்களும், சீன ராணுவம் தரப்பில் 4 பேரும் உயிரிழந்தனா் என்றும் பென்டகன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT