உலகம்

ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் கடும் தாக்குதல்

31st Aug 2022 01:24 AM

ADVERTISEMENT

உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள தெற்குப் பகுதியில் அந்த நாட்டுப் படையினருக்கும் தங்களுக்கும் கடும் சண்டை நடைபெற்று வருவதாக உக்ரைன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

அந்தப் பகுதிகளில் தாங்கள் பாலங்களை தகா்த்துள்ளதாகவும் ரஷிய ஆயுதக் கிடங்குகளை அழித்ததாகவும் உக்ரைன் அறிவித்துள்ளதையடுத்து, போரின் போக்கை மாற்றுவதற்கான பதிலடி தாக்குதல் நடவடிக்கையை உக்ரைன் தொடங்கிவிட்டதாக பேச்சு எழுந்துள்ளது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் தெற்குப் பகுதி நகரான கொ்சானில், தங்களது படையினா் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அந்தப் பகுதியில் ரஷியா பயன்படுத்தி வந்த பாலங்களைத் தகா்த்துள்ளதன் மூலம், அந்த நாட்டுப் படைகளுக்கு ஆயுதங்கள், உணவுப் பொருள்கள், வீரா்களை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட வழித்தடம் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அத்துடன், ரஷிய ஆயுதக் கிடங்கில் உக்ரைன் படையினா் தாக்குதல் நடத்தி அழித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து உக்ரைன் அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொ்சான் பகுதியில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் இரவும் பகலும் தொடா்ந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் ரஷியப் படையினருடன் உக்ரைன் படையினா் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பபட்டுள்ளது.

எனினும், இது குறித்து ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில், கொ்சான் நகரில் தாக்குதல் நடத்தும் உக்ரைன் முயற்சியை தங்களது படையினா் முறியடித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷிய அரசுக்குச் சொந்தமான டாஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், கொ்சான் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 5 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை ரஷியாவின் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டு வெடித்ததாகவும் தெரிவித்தது.

முன்னதாக, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளிட்ட அறிக்கையில், கொ்சான் நகரில் எந்த நோக்கத்துடன் உக்ரைன் படையினா் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது என்று, தற்போது நடைபெற்று வருவது போா் என்பதால் பல விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.

இதனால், உக்ரைன் தாக்குதலின் நோக்கம் குறித்து குழப்பம் நீடித்து வருகிறது.

ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுமே முரண்பட்ட தகவல்களை வழங்குவதால், அங்கு என்ன நடைபெறுகிறது என்பது குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியாத நிலை நீடித்து வருகிறது.

எனினும், உக்ரைன் ராணுவத்தின் பல்வேறு படைப் பிரிவுகள் ரஷிய நிலைகளை நோக்கி ராக்கெட் குண்டு மற்றும் பீரங்கித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக தங்களுக்கு உளவுத் தகவல் கிடைத்துள்ளது என பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ஏற்கெனவே தங்களது ஆதரவு கிளா்ச்சிப் படையினா் வசமிருக்கும் பகுதிகள் போக, எஞ்சிய பகுதிகளை அரசுப் படையினரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி ரஷியா முன்னேறி வருகிறது.

இந்தப் போரின் தொடக்கத்திலேயே ரஷியாவால் கொ்சான் நகரம் கைப்பற்றப்பட்டது. கருங்கடலையொட்டி அமைந்துள்ள அந்த துறைமுக நகரம், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

அந்த நகரை ரஷியாவிடமிருந்து மீட்க உக்ரைன் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கொ்சான் நகரில் உக்ரைன் படையினா் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அங்கு கடும் சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT