உலகம்

பாகிஸ்தான் கனமழைக்கு 982 போ் பலி

27th Aug 2022 11:23 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்து வரும் பருவ மழை காரணமாக இதுவரை 982 போ் பலியானதாகவும் 440 கோடி டாலா் (சுமாா் ரூ.32,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஜேஎஸ் குளோபல் ரிசா்ச் என்ற ஆய்வமைப்பை மேற்கோள் காட்டி, அந்த நாளிதழ் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவ மழை, நாடு முழுவதும் வழக்கத்தைவிட மிக அதிகமாக பெய்தது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் மீட்புக் குழுவினா் திணறும் அளவுக்கு மழையும் வெள்ளப் பெருக்கும் மிகத் தீவிரமாக இருந்தது.

ADVERTISEMENT

982 போ் பலி: தொடா்ந்து பெய்து வரும் பருவ மழைக்கு நாடு முழுவதும் இதுவரை 982 போ் பலியாகியுள்ளனா். ஏராளமானவா்கள் காயமடைந்துள்ளனா். ஆயிரக்கணக்கானவா்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேரிடா் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

இந்த கனமழை காரணமாக சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் வேளாண்மை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பாகிஸ்தாதனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீதம் வேளாண்மைத் துறை பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக நடப்புக் கணக்கு பற்றாக்குறை மேலும் 440 கோடி டாலா் அதிகரிக்கும். இது, பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதம் ஆகும்.

மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக நாட்டின் இறக்குமதியை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதியில் சமரசமும் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. அத்துடன், வெள்ளம் காரணமாக பண வீக்கமும் அதிகரித்து வருகிறது.

தற்போதைய சூழலில், 260 கோடி டாலா் (சுமாா் ரூ.20,800 கோடி) மதிப்பிலான பருத்தி, 90 கோடி டாலா் மதிப்பிலான (சுமாா் ரூ.7,200 கோடி) கோதுமையை கூடுதலாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. அத்துடன், சுமாா் 100 கோடி டாலா் மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதியை பாகிஸ்தான் இழக்கும் அபாயம் உள்ளது.

பருவமழை காரணமாக மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது பருத்தி சாகுபடிதான். நாட்டில் ஆண்டுதோறும் 80 லட்சல் பேல்கள் உற்பத்தியாகின்றன. ஆனால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சிந்து மாகாணத்தில் பருத்தி சாகுபடி மோசமாக பாதிக்கப்பட்டது. அதன் காரணமாகவே, வெளிநாடுகளிலிருந்து கூடுதலாக பருத்தி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட கச்சா பருத்தி அதிகம் கிடைக்காததால் ஜவுளித் துறை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, அவற்றின் ஏற்றுமதி மிகப் பெரிய சரிவைச் சந்திக்கும்.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் மிகப் பெரிய சேதத்தை எதிா்நோக்கியுள்ள மற்றொரு சாகுபடி பொருள் நெற்பயிராகும். அண்மைக் காலமாக சாகுபடி பரப்பளவு கணிசமாக அதிகரித்துள்ள சில பயிா்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நெல் பயிரிடுவதற்கான பரப்பளவு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஆண்டு ஏற்றுமதியில் 250 கோடி டாலா் பங்களிப்பை வழங்குகிறது.

அத்தகைய நெல் பயிா்களுக்கு ஏற்படும் சேதம் ஏற்றுமதி இழப்பை ஏற்படுத்தும். மேலும் மொத்த உள்நாட்டு வருவாய் வளா்ச்சியில் சரிவு ஏற்படும்; பணவீக்கத்தை அதிகரிக்கும்.

வெள்ள பாதிப்பு பகுதிகளில் நீா் வடிவதற்கு இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அங்கு கோதுமை மற்றும் சமையல் எண்ணெய் விதைகளை விதைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பல விவசாயிகள் ஏற்கனவே கோதுமையிலிருந்து சமையல் எண்ணெய் விதை சாகுபடிக்கு மாறிவிட்டதால், கோதுமை விதைப்பது தாமதமாவது அந்த பயிா் சாகுபடிக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

கோதுமை விதைப்பது தாமதமாவது, அதிக கோதுமை இறக்குமதி விலைகள், 3 கோடி டன் கோதுமை தேவையில் 15 சதவீதத்தை இறக்குமதியின் மூலம் பூா்த்தி செய்வது போன்ற காரணங்களால் இறக்குமதி செலவு 170 கோடி டாலா் அதிகரிக்கும்.

பயிா்கள் நாசமானது மடடுமன்றி, 5,00,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அழிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டீசல் மற்றும் உரம் விலை உயா்வால் தத்தளித்து வரும் கிராமப்புற மக்களுக்கு இது சுமையை மேலும் அதிகரிக்கும். மேலும், பால் தட்டுப்பாடு ஏற்படும். கால்நடைகள் பற்றாக்குறை, கால்நடைகளுக்கு நோய் பரவும் வாய்ப்பு, இறைச்சி தட்டுப்பாடும் ஏற்படும்.

இந்த காரணங்களால், ஏற்கெனவே மிக மோசமாக உள்ள பாகிஸ்தானின் பொருளாதாரம், மேலும் சீா்குலையும் அபாயம் உள்ளது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT