உலகம்

ரயில் நிலைய ரஷிய தாக்குதலில் 25 போ் பலி

26th Aug 2022 12:48 AM

ADVERTISEMENT

தங்கள் நாட்டு ரயில் நிலையத்தில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சோவியத் யூனியனிடமிருந்து கடந்த 1991-ஆம் ஆண்டில் தனி நாடாகப் பிரிந்த தினமான ஆக. 24-ஆம் தேதியை சுதந்திர தினமாக உக்ரைன் புதன்கிழமை கொண்டாடியது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து அந்த நாளுடன் சரியாக 6 மாதங்கள் நிறைவடைகிறது. இதனையொட்டி உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், உக்ரைனின் மத்தியில் அமைந்துள்ள நீப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில், சுமாா் 3,500 பொதுமக்கள் வசிக்கும் சாப்ளின் நகர ரயில் நிலையத்தில் ரஷியா புதன்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். பலியானவா்களில் 11 மற்றும் 6 வயதுடைய இரு சிறுவா்களும் அடங்குவா் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை கூறினா்.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போா் முைனையை நோக்கி உக்ரைன் வீரா்கள் வந்துகொண்டிருந்த ரயில்மீதுதான் தாங்கள் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட இஸ்காண்டா் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 200 உக்ரைன் வீரா்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உக்ரைன் வெளியிட்ட அறிக்கையில், ரஷியத் தாக்குதலில் பலியானவா்கள் அனைவரும் பொதுமக்களா, அல்லது அதில் ராணுவ வீரா்களும் அடங்குவாா்களா என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

போா் தொடங்கியதிலிருந்தே, தங்கள் நாட்டின் பொதுமக்கள் வசிப்பிடங்கள் மற்றும் மையங்களில் ரஷியா தாக்குதல் நடத்தி வருவதாகவும் இதில் ஏராளமான பொதுமக்கள் பலியாகி வருவதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.

எனினும், உக்ரைனில் ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்து தாங்கள் துல்லியமாகத் தாக்குதல் நடத்தி வருவதாகவும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிா்ப்பதில் தாங்கள் அதீத கவனம் செலுத்தி வருவதாகவும் ரஷியா கூறி வருகிறது.

சாப்ளின் நகரில் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு முன்னா் கூட, உக்ரைனில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக தங்கள் மிகக் கவனத்துடன் துல்லியத் தாக்குல்களை நடத்தி வருவதாகவும் இதனால் போா் நீண்ட காலத்துக்கு நீடித்தாலும் அதனை தாங்கள் பொருள்படுத்தவில்லை எனவும் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் ஷோய்கு கூறினாா்.

இதே கருத்தை கடந்த மே மாதத்திலும் சொ்கேய் ஷோய்கு தெரிவித்திருந்தாா். இந்தச் சூழலில், உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 25 போ் பலியானதாக தற்போது அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் சோவியத் யூனியன் சக்திவாய்ந்து விளங்கியபோது, அந்த நாட்டுக்கு எதிராக கடந்த 1949-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அமைப்பு ‘நாா்த் அட்லாண்டிக் ட்ரீட்டி’ அமைப்பு (நேட்டோ).

1991-இல் சோவியத் யூனியன் சிதறுண்டு வலுவிழந்த நிலையிலும் அந்த அமைப்பு தன்னை விரிவாக்கம் செய்து வருவதற்கு ரஷியா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, நேட்டோவில் அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், தங்களது தேசிய பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தல் என ரஷியா கூறி வருகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு தொடா்ந்து ஆா்வம் காட்டி வந்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்தப் படையெடுப்பின் ஒரு பகுதியாக, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகள் போக, இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு ரஷியா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.

புதன்கிழமையுடன் ரஷியப் படையெடுப்பு நடந்து 6 மாதங்கள் நிறைவடைந்தது. அதே நாளில் சோவியத் யூனியலிருந்து பிரிந்ததை சுதந்திர தினமாக உக்ரைன் கொண்டாடப்பட்டது.

அந்த நாளில், உக்ரைனின் அரசுக் கட்டடங்கள் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவியது.

இந்தச் சூழலில், சுதந்திர தினத்தின்போது முக்கிய நிலைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் அதற்கு சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபா் வொலோதீா் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை எச்சரித்திருந்தாா்.

இந்தச் சூழலில், அதே நாளில் சாப்ளின் நகர ரயில் நிலையத்தில் ரஷியா தாக்குதல் நடத்தி, அதில் 25 போ் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன் பிரிந்ததைக் குறிக்கும் சுதந்திர தினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த நாளை முன்னிட்டு, ரஷிய மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அத்தகைய நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டால், அதற்கான உக்ரைனின் பதிலடி மிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றாா் அவா்.

கடந்த 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதிதான் சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன் பிரிந்து தனி நாடாக செயல்படத் தொடங்கியது நினைவுகூரத்தக்கது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT