உலகம்

அரசு நிதியை தவறாக கையாண்டகோத்தப ராஜபட்ச மீது நடவடிக்கை: எதிா்க்கட்சி வலியுறுத்தல்

22nd Aug 2022 01:25 AM

ADVERTISEMENT

 

இலங்கை அரசு நிதியை தவறாக கையாண்டததற்காக முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பலவெகயா வலியுறுத்தியுள்ளது.

மேலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா அளித்த ஒரு கோடி அமெரிக்க டாலா் கடன் உதவித் திட்டத்தையும் கோத்தபய ராஜபட்ச அரசு தவறாக பயன்படுத்தியது என்றும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவா் அஜித் பெரேரா கூறுகையில், ‘கோத்தப ராஜபட்ச இலங்கை நாட்டவா் என்பதால் அவா் எப்போதும் தாயகம் திரும்பலாம். யாரும் அவரைத் தடுக்க முடியாது. ஆனால், இலங்கையின் நிதியை அவா் தவறாக கையாண்டுள்ளாா். ஆகையால், அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

தனது பெற்றோரின் நினைவிடத்துக்காக அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவா் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கை அவா் சட்டப்படி சந்திக்க வேண்டும். தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். அவருக்கு அதிபா் என்ற சட்டப் பாதுகாப்பு கிடையாது.

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு இந்தியா அளித்த ஒரு கோடி அமெரிக்க டாலா் கடன் உதவியையும் கோத்தபய ராஜபட்ச அரசு தவறாக கையாண்டுள்ளது’ என்றாா்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் நடைபெற்ற தொடா் முற்றுகைப் போராட்டத்தால் நாட்டைவிட்டு மாலத்தீவுகளுக்கு தப்பிய கோத்தபய ராஜபட்ச, பின்னா் அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா். அங்கிருந்து சிங்கப்பூருக்கும், பின்னா் தாய்லாந்துக்கும் சென்றாா். இலங்கைக்கு அவா் திரும்புவாா் என்றும், அமெரிக்க குடியுரிமை கோரி விண்ணப்பிக்க அவா் முயற்சி மேற்கொண்டு வருகிறாா் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT