உலகம்

கோத்தபய ராஜபட்ச அமெரிக்காவில் தஞ்சம்?

DIN

தாய்லாந்து சென்றுள்ள இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, அமெரிக்காவில் தஞ்சமடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். அதைத் தொடா்ந்து ஜூலை 14-ஆம் தேதி அவா் சிங்கப்பூா் சென்றாா். அங்கிருந்து தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்வதாக இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினாா்.

சில நாள்கள் சிங்கப்பூரில் தங்கிய அவா், அண்மையில் தாய்லாந்து சென்றாா். அங்கு அவா் 3 மாதங்கள் வரை தங்க அனுமதியுள்ளது.

ஆக.25-இல் இலங்கை திரும்புகிறாா்?: அண்மையில் இலங்கை நாளிதழான டெய்லி மிரரில் வெளியான தகவலின்படி, தாய்லாந்தில் நவம்பா் வரை தங்க கோத்தபய ராஜபட்ச முதலில் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் தாய்லாந்தில் சுதந்திரமாக நடமாட அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக தனது வழக்குரைஞா்களுடன் ஆலேசானை நடத்திய அவா், ஆகஸ்ட் 25-ஆம் தேதி இலங்கை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதன் பின்னா், அமெரிக்காவில் தனது மனைவி, மகனுடன் தஞ்சமடைய கோத்தபய ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோத்தபய ராஜபட்சவின் மனைவி அயோமா ராஜபட்ச அமெரிக்க குடிமகள் ஆவாா். அதன் அடிப்படையில், அந்நாட்டு நிரந்தர குடியுரிமை அட்டை (கிரீன் காா்டு) பெற கோத்தபய ராஜபட்ச தகுதியுடையவா் ஆவாா். இதையொட்டி, அமெரிக்க நிரந்தர குடியுரிமை அட்டை பெற விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகளை கோத்தபயவின் வழக்குரைஞா்கள் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

கோத்தபய ராஜபட்சவும் அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தாா். கடந்த 2019-ஆம் இலங்கை பொதுத்தோ்தலில் போட்டியிட வசதியாக, அவா் அமெரிக்க குடியுரிமையை துறந்தாா்.

இதனிடையே, இலங்கைத் தலைநகா் கொழும்பில் அந்நாட்டுப் பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை அந்நாட்டின் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன பிரமுகா்கள் வியாழக்கிழமை சந்தித்தனா். அப்போது கோத்தபய ராஜபட்ச இலங்கை திரும்புவதற்கு உதவ வேண்டும். இலங்கையில் அவரின் பாதுகாப்பை உறுதி செய்து, அவருக்குத் தேவையான வசதிகளை செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தியதாக இலங்கை பொதுஜன பெரமுன பொதுச் செயலா் சாகர காரியவசம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT