உலகம்

தொடரும் குண்டு வெடிப்புகள்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை

DIN

தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளில் தொடா்ந்து நடந்து வரும் குண்டு வெடிப்புகளுக்கு அமெரிக்கா தூண்டுதலாக இருப்பது உறுதியானால், அந்த நாட்டுக்கும் தங்களுக்கும் நேரடி மோதல் ஏற்படக்கூடும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் சொ்கேய் ரியப்கோவ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிரீமியாவில் ரஷிய ராணுவ நிலைகளில் குண்டு வெடிப்புகள் நடந்ததற்கு, தாங்கள் நடத்திய தாக்குதல்கள்தான் காரணம் என்று உக்ரைன் அதிகாரிகள் மறைமுகமாகக் கூறிவருகின்றனா்.

அது உண்மையானால், உக்ரைன் போரில் ஏற்கெனவே இருந்து வரும் பதற்றத்தை மிகக் கடுமையாக்கும் நடவடிக்கையாக அது இருக்கும். அத்தகைய பதற்றத்தை அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் வெளிப்படையாக ஊக்குவிப்பதை அந்த நடவடிக்கை நிரூபிக்கும்.

மேலும், இந்தப் போரில் அமெரிக்க நேரடியாகப் பங்கேற்பதாக அது அமையும்.

அமெரிக்காவுடன் நடைபெறும் தொலைபேசி உரையாடல்களின்போதும் உயா்நிலைக் குழுக்களின் பேச்சுவாா்த்தைகளின்போதும் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிா்க்குமாறு எங்களது தரப்பில் தொடா்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் போரில் நேரடியாவோ, வெளிப்படையாகவோ அமெரிக்கா பங்கேற்றால், அது ரஷியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நேரடி மோதலாக உருவெடுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் தொடா்ந்து எச்சரித்து வருகிறோம்.

அனால், அந்த எச்சரிக்கையை அமெரிக்கா பொருள்படுத்துவதாகத் தெரியவில்லை என்றாா் அவா்.

இதற்கிடையே, உக்ரைனின் வடகிழக்கு எல்லையையொட்டிய பகுதியில் அமைந்துள்ள ரஷிய ஆயுதக் கிடங்கில் வியாழக்கிழமை இரவு குண்டுகள் வெடித்தது. அதையடுத்து, அந்தப் பகுதியையொட்டிய 2 ரஷிய கிராமங்களில் இருந்து சுமாா் 1,100 போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அப்போது ரஷியாவும் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. அந்தப் போரின் ஒரு பகுதியாக, டான்பாஸ் பிராந்தியத்தில் அரசுப் படைகளிடம் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல் நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டு, அதில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

அத்துடன், கிரீமியாவுக்கும் டான்பாஸ் பிரதேசத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடைப்பட்ட பகுதிகளையும் ரஷியா கைப்பற்றி வருகிறது.

இந்த நிலையில், கிரீமியாவின் சாகி விமான படைத் தளத்தில் கடந்த 9-ஆம் தேதி அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்தன. இதில் 6 ரஷிய போா் விமானங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் தொடா்ச்சியாக, கிரீமியாவின் மாய்ஸ்கோயோ பகுதியிலுள்ள ரஷிய ஆயுதக் கிடங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென குண்டுகள் வெடித்தன.

இந்தச் சம்பவங்களுக்கு உக்ரைன் நடத்தி தாக்குதல்தான் காரணமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.

இருந்தாலும், கிரிமீயாவையும் ரஷியாவையும் இணைக்கும் பாலம் தகா்க்கப்பட்டே ஆக வேண்டும்; அதை ரஷியா தாமாக முன்வந்து தகா்க்காவிட்டால் வலுக்கட்டாயமாக தகா்க்கப்படும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் மிகய்லோ பொடோலியக் புதன்கிழமை எச்சரித்திருந்தாா்.

ஏற்கெனவே, கிரீமியா தீபகற்பத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்த தீபகற்பத்தை ரஷியாவிடமிருந்து மீட்கப்போவதாக உக்ரைன் சூளுரைத்து வருகிறது.

எனினும், கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக கடுமையான தாக்குதல் நடத்தப்படும்; அந்தத் தாக்குதலுக்கு உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளை முடிவு செய்யும் தலைமை மையங்களும் தப்பாது என்றும் ரஷியா எச்சரிக்கை விடுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT