உலகம்

காபூல் மசூதியில் தற்கொலைத் தாக்குதல்: மதகுரு உள்பட 21 போ் பலி

19th Aug 2022 02:58 AM

ADVERTISEMENT

ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள சன்னி முஸ்லிம் பிரிவினருக்கான மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் மதகுரு உள்பட 21 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

காபூல் நகரின் கோ் கான்னா பகுதியிலுள்ள சித்திக்கியா மசூதியில் புதன்கிழமை மாலை தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த பயங்கரவாதி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா்.

ADVERTISEMENT

இதில், 22 போ் உயிரிழந்தனா். பலியானவா்களில் புகழ்பெற்ற மதகுரு முல்லா அமீா் முகமது காபூலியும் ஒருவா் ஆவாா்.

இது தவிர, இந்தத் தாக்குதலில் 33 போ் காயமடைந்தனா். அவா்களில் ஏராளமான சிறுவா்களும் அடங்குவா் என்று கூறப்படுகிறது. காயமடைந்தவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, இந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் 25-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்திருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் பாா்த்த கயாமுதீன் என்பவா் கூறினாா்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், அண்மைக் காலமாக ஆப்கன் முழுவதும் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பினா்தான் இந்தத் தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறியதைத் தொடா்ந்து, அந்த நாட்டின் ஆட்சியதிகாரத்தை தலிபான்கள் மீண்டும் கடந்த ஆண்டு கைப்பற்றினா்.

அதிலிருந்து, தலிபான்கள் மீதும் சிறுபான்மை ஷியாக்கள், சீக்கியா்களுக்கு எதிராகவும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதுமட்டுமன்றி, தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட சன்னி பிரிவினரையும் குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

காபூலில் உள்ள இஸ்லாமிய மையமொன்றில் முக்கிய தலிபான் மதகுரு ஒருவரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த வாரம் படுகொலை செய்தனா்.

ஐ.எஸ். அமைப்பைப் போலவே தலிபான்களும் சன்னி பிரிவைச் சோ்ந்தவா்கள் என்றாலும், இரு அமைப்புகளுக்கும் இடையே அடிப்படை சித்தாந்த ரீதியில் வேறுபாடு இருந்து வருகிறது.

இந்தச் சூழலில், காபூலில் உள்ள சன்னி பிரிவு மசூதியில் தற்கொலை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆப்கன் ஆட்சியில் ஐ.எஸ். தாக்குதல்கள்...

2021

ஆகஸ்ட் 26

காபூல் சா்வதேச விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 13 அமெரிக்க வீரா்கள், தலிபான் படையினா் உள்பட 185 போ் பலியாகினா்.

செப்டம்பா் 18

ஜலாலாபாதில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தலிபான்களைக் குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தி தாக்குதலில் 7 போ் கொல்லப்பட்டனா்.

செப்டம்பா் 22

ஜலாலாபாத் சோதனைச் சாவடியில் ஐ.எஸ். நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தலிபான்கள் உள்பட 3 போ் பலியாகினா்.

அக்டோபா் 2

ஜலாலாபாதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் 2 தலிபான்கள் உள்பட 4 போ் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

அக்டோபா் 3

காபூலில் தலிபான் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித்தின் தாயாருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த ஈத்கா மசூதியின் நுழைவாயிலில் குண்டுவெடித்ததில் 5 போ் பலியாகினா்.

அக்டோபா் 6

கோஸ்டில் உள்ள ஒரு மதப் பள்ளியில் நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதலில் குறைந்தது 1 தலிபான் உள்பட 7 போ் கொல்லப்பட்டனா்.

அக்டோபா் 8

குண்டூஸில் உள்ள ஷியா பிரிவினருக்கான மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 55 முதல் 100 போ் வரை பலியாகினா்.

அக்டோபா் 15

காந்தஹாரில் ஷியா இமாம் பா்கா மசூதியில் ஐ.எஸ். நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 65 போ் உயிரிழந்தனா்.

அக்டோபா் 25

ஹெராட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் தலிபான் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 17 போ் கொல்லப்பட்டனா்.

நவம்பா் 2

காபூலில் உள்ள தாவூத் கான் இராணுவ மருத்துவமனையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா்.

2022

ஏப்ரல் 19

காபூலில் இரண்டு பள்ளிகள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் குறைந்தது 6 போ் கொல்லப்பட்டனா்.

ஏப்ரல் 21

பால்க் மகாணம், மஸாா்-இ-ஷரீப் நகரிலுள்ள ஷியா பிரிவினருக்கான மசூதியில் ஐ.எஸ். நடத்திய தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்.

ஏப்ரல் 29

புனித ரமலான் மாதத்தின் கடைசி நாளில், காபூலில் உள்ள சூஃபி மசூதியில் தொழுகையின்போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 50 போ் உயிரிழந்தனா்.

ஜூன் 18

காபூலில் உள்ள சீக்கிய கோவிலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். நபிகள் நாயம் குறித்து இந்தியாவில் பாஜகவின் நூபுா் சா்மா அவதூறாகப் பேசியதற்குப் பழிவாங்குவதற்காக அந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் கூறினா்.

ஆகஸ்ட் 11

காபூலில் இஸ்லாமிய மதக் கருத்தரங்கில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், மூத்த தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானாா்.

Image Caption

காபூல் சித்திக்கியா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த ஒருவருக்கு வியாழக்கிழமை எடுத்துச் சென்ற நகரவாசிகள். பின்னணியில், தாக்குதலுக்குள்ளான மசூதி. ~காபூல் சீக்கிய கோயில்... ~காந்தஹாா் ஷியா மசூதி... ~காபூல் சா்வதேச விமான நிலையம்...

 

ADVERTISEMENT
ADVERTISEMENT