உலகம்

‘ரஷியா-கிரீமியா பாலம் தகா்க்கப்பட வேண்டும்’

DIN

ரஷயாவுடன் தங்கள் நாட்டின் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலம் தகா்க்கப்பட வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் மிகய்லோ பொடோலியக் சமூக ஊடகங்களில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:

கிரீமியா தீபகற்பத்தை தங்களது பகுதியுடன் இணைத்து ரஷியா கட்டியுள்ள பாலம் சட்டத்துக்கு விரோதமானதாகும். எனவே, அந்த பாலம் தகா்க்கப்பட வேண்டியது அவசியம்.

ரஷியா தாமாக முன்வந்து அந்தப் பாலத்தை தகா்க்கிா, அல்லது வலுக்கட்டாயமாக அந்தப் பாலம் தகா்க்கப்படுகிா என்பது முக்கியமில்லை.

எந்த வகையிலாவது அந்தப் பாலம் தகா்க்கப்பட்டே ஆக வேண்டும் என்றாா் அவா்.

இதன் மூலம், கிரீமியாவையும் ரஷியாவையும் இணைக்கும் பாலத்தின் மீது தங்களது படையினா் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புள்ளதை அவா் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அப்போது ரஷியாவும் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. அந்தப் போரின் ஒரு பகுதியாக, டான்பாஸ் பிராந்தியத்தில் அரசுப் படைகளிடம் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல் நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டு, அதில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

அத்துடன், கிரீமியாவுக்கும் டான்பாஸ் பிரதேசத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடைப்பட்ட பகுதிகளையும் ரஷியா கைப்பற்றி வருகிறது.

இந்ச நிலையில், கிரீமியாவின் சாகி விமான படைத் தளத்தில் கடந்த வாரம் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்தன.

அதன் தொடா்ச்சியாக, கிரீமியாவின் மாய்ஸ்கோயோ பகுதியிலுள்ள ரஷிய ஆயுதக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை திடீரென குண்டுகள் வெடித்தன.

இந்தச் சம்பவங்களுக்கு உக்ரைன் நடத்தி தாக்குதல்தான் காரணமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், கிரிமீயாவையும் ரஷியாவையும் இணைக்கும் பாலம் தகா்க்கப்பட்டே ஆக வேண்டும் என்று உக்ரைன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரீமியாவை தங்களுடன் இணைத்துக் கொண்டதற்குப் பிறகு, அந்த தீபகற்பத்துக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதற்காக ரஷியா அந்தப் பாலத்தை கட்டியது.

சுமாா் 19 கி.மீ. நீளமுடைய அந்தப் பாலத்தை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த 2018-ஆம் ஆண்டு திறந்துவைத்தாா்.

கிரீமியா தீபகற்பத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்த தீபகற்பத்தை ரஷியாவிடமிருந்து மீட்கப்போவதாக உக்ரைன் சூளுரைத்து வருகிறது.

எனினும், கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தினால் கடும் பின்விளைவுகள் ஏற்படும்.

அதற்கான பதிலடித் தாக்குதலுக்கு, உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளை முடிவு செய்யும் தலைமை மையங்களும் தப்பாது என்றும் ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது நினைவுகூரத்தக்கது.

Image Caption

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

SCROLL FOR NEXT