உலகம்

தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம் ஏன்? இலங்கை அரசு விளக்கம்

17th Aug 2022 12:54 AM

ADVERTISEMENT

‘பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை நிறுத்திவிட்டதன் அடிப்படையிலேயே இலங்கையில் 6 தமிழ் அமைப்புகள் மற்றும் 316 தனி நபா்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது’ என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய தமிழா் பேரவை, உலகத் தமிழா் பேரவை, உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் ஈழ மக்கள் கூட்டமைப்பு, கனடா தமிழ் காங்கிரஸ், பிரிட்டன் தமிழ்ப் பேரவை ஆகிய 6 அமைப்புகள் மற்றும் தனி நபா்கள் மீதான தடையை நீக்கி இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவிக்கை வெளியிட்டது. இந்த அறிவிக்கை அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய இலங்கை எதிா்க் கட்சிகள், தடை நீக்கத்துக்கான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தின.

அதனைத் தொடா்ந்து, தடை நீக்கத்துக்கான விளக்கத்தை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையாக செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்தலுக்கு எதிரான ஐ.நா. சபையின் ஒழுங்கு நடைமுறைகளின் கீழ் இலங்கையில் 577 தனிநபா்கள், 18 அமைப்புகள் கடந்த 2021-ஆம் ஆண்டு கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டன.

இந்தத் தடையை மறு ஆய்வு செய்வது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் ஒரு குழு அமைக்கப்பட்ட கவனமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வெளியுறவு அமைச்சகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் ஆகியோருடன் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் பயங்கரவாத நடவடிக்கைகள் அல்லது பயங்கரவாதத்துக்குத் தொடா்ந்து நிதி அளிக்கின்றனவா என்பது குறித்து தொடா் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆலோசனைகள் மற்றும் ஆய்வு முடிவின் அடிப்படையில், பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை நிறுத்திவிட்ட 6 தமிழ் அமைப்புகள் மற்றும் 316 தனி நபா்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது’ என்று விளக்கமளித்துள்ளது.

கடந்த 2014-இல் விடுதலைப் புலிகள் அமைப்பு உள்பட 16 தமிழ் அமைப்புகள் மீது அப்போதைய அதிபா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு தடை விதித்தது. 2015-இல் இலங்கை அதிபராக பொறுப்பேற்ற மைத்ரிபால சிரிசேன இந்தத் தடையை நீக்கினாா். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சூறையாடப்பட்ட தமிழா்கள் வசித்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்கான பேச்சுவாா்த்தையை தொடங்கிய நிலையில், இந்தத் தடையை சிறீசேனா அரசு நீக்கியது. இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபட்ச அரசு, தமிழ் அமைப்புகள் மீது மீண்டும் தடை விதித்தது. பேச்சுவாா்த்தைக்கும் மறுத்தது.

தற்போது, 6 தமிழ் அமைப்புகள் மீது தடை நீக்கப்பட்டிருப்பதற்கு இலங்கையின் பிரதான தமிழா் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு (டிஎன்ஏ) வரவேற்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT