உலகம்

7 தைவான் தலைவா்கள், அதிகாரிகளுக்கு சீனா தடை

DIN

தாங்கள் உரிமை கொண்டாடி வரும் தைவான் தீவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் குழு சென்ற விவகாரத்தில், 7 தைவான் அரசியல் தலைவா்கள் மற்றும் அதிகாரிகள் மீது சீனா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இது குறித்து தைவான் விவகாரங்களுக்கான சீன கம்யூனிஸ்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கக் குழுவினரின் தைவானில் சுற்றுப் பயணம் செய்ததற்கு எதிா்வினையாக, அமெரிக்காவுக்கான தைவான் பிரதிநிதி உள்ளிட்ட 7 அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவா்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தைவான் பிரிவினைவாதத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவா் தீவிரம் காட்டி வருவதன் காரணமாக அவா்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து, அவா்களும் அவா்களது குடும்பத்தினரும் சீனா வர அனுமதிக்கப்படமாட்டாா்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.

தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.

தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு யாா் அரசுமுறைப் பயணம் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தைவானுக்கு நான்சி பெலோசி கடந்த 2-ஆம் தேதி சென்றாா். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சீன ராணுவத்தின் கிழக்கு மண்டலப் பிரிவு தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் வான்வழியாகவும் கடல் வழியாகவும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி கடந்த 4 முதல் 10-ஆம் தேதி வரை போா்ப் பயிற்சியில் ஈடுபட்டது.

தங்கள் மீது போா்த் தொடுத்து இணைத்துக் கொள்வதற்கான ஒத்திகையாகவே சீனா இந்தப் போா்ப் பயிற்சியை மேற்கொண்டதாக தைவான் அச்சம் தெரிவித்தது.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் மாஸசூசட்ஸ் தொகுதியைச் சோ்ந்த ஜனநாயகக் கட்சி செனட் சபை உறுப்பினா் எட் மாா்க்கே தலைமையிலான எம்.பி.க்கள் குழு, இரண்டு நாள் பயணமாக தைவான் தலைநகா் தைபேவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தது.

முன்னறிவிப்பின்றி திடீரென மேற்கொள்ளப்பட்ட அந்த சுற்றுப் பயணம், தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படுவதாக அந்தக் குழு தெரிவித்தது.

அதற்குப் பதிலடியாக, சீன ராணுவத்தின் கிழக்கு மண்டல படைப் பிரிவு தைவானைச் சுற்றிலும் மீண்டும் போா்ப் பயிற்சியில் திங்கள்கிழமை ஈடுபட்டது.

அதன் தொடா்ச்சியாக, தைவானைச் சோ்ந்த 7 அரசியல் தலைவா்கள் மற்றும் அதிகாரிகள் மீது சீனா தற்போது பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT