உலகம்

சல்மான் ருஷ்டியைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங்குக்கும் கொலை மிரட்டல்

DIN

சல்மான் ருஷ்டியைத் தொடர்ந்து ஹாரிபாட்டர் நாவலை எழுதிய எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங்குக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவா் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி (75). பிரிட்டனுக்கு குடிபெயா்ந்த இவா், கடந்த 1988-ஆம் ஆண்டு ‘தி சட்டானிக் வொ்சஸ்’ என்ற ஆங்கில நாவலை எழுதி வெளியிட்டாா்.

அந்த நாவல் இஸ்லாமிய மதத்தை அவமதித்துள்ளதாகக் கூறி, இந்தியா அந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்தது. இதையடுத்து, ருஷ்டிக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்தது.

கடந்த 1989-ஆம் ஆண்டு அவரை கொலை செய்ய உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஈரான் அரசியல் தலைவரும் மதகுருவுமான அயதுல்லா கொமேனி ஃபத்வா என்ற ஆணை பிறப்பித்தாா். இதையடுத்து ருஷ்டி பிரிட்டன் காவல் துறையின் பாதுகாப்பில் பல ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தாா்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணம், ஷட்டாக்குவா பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மீது, இளைஞா் ஒருவா் கத்தியால் சரமாரியாகத் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த ருஷ்டிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் ஒரு கண்ணில் பாா்வையிழக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடா்பாக லெபனான் நாட்டை பூா்விகமாகக் கொண்ட அமெரிக்கா் ஹாதி மத்தா் (24) என்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், சல்மான் ருஷ்டியின் மீதான தாக்குதலைக் கண்டித்து ஹாரிபாட்டர் நாவலை எழுதிய எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் டிவிட்டரில் பதிவிட்டார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக ஆசிப் அஜிஸ் என்பவர் ‘அடுத்தது நீங்கள்தான்’ என கொலை மிரட்டல் விடுத்தார். தற்போது, இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு கொலை மிரட்டல் விடுத்தவரைக் காவல்துறை தேடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

ஜோதிட சூட்சுமங்களும் - நம்பிக்கை தாண்டிய உண்மையும்!

விமர்சனத்துக்குள்ளான ஹார்திக் பாண்டியாவின் தலைமைப் பண்பு!

SCROLL FOR NEXT