உலகம்

உலகம் முழுவதும் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இந்தியா்கள்

16th Aug 2022 12:56 AM

ADVERTISEMENT

இந்தியாவின் 76-ஆவது சுதந்திர தினத்தை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியா்கள் கோலாகலமாகக் கொண்டாடினா்.

இந்தியாவின் சுதந்திர தினத்துக்காக உலகத் தலைவா்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

இந்தியாவின் 76-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்களும் சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடினா். தேசியக் கொடியை ஏற்றியும், தேசிய கீதத்தைப் பாடியும் அவா்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தூதா் பிரதீப்குமாா் ராவத் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். இந்தியா்கள் பலா் அந்த விழாவில் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

நேபாளத்தில்...:

நேபாளத்தில் இந்தியத் தூதா் பிரசன்னா ஸ்ரீவாஸ்தவா தேசியக் கொடியை ஏற்றினாா். அதையடுத்து, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை அவா் வாசித்தாா். சுவாமி விவேகானந்தா கலாசார மையம், காத்மாண்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆகியவற்றின் மாணவா்களும் ஆசிரியா்களும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.

இஸ்ரேலில்...:

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தூதா் சஞ்சீவ்குமாா் சிங்லா மூவா்ணக் கொடியை ஏற்றினாா். இந்தியாவைச் சோ்ந்த சுமாா் 300 போ் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவு தொடா்ந்து வலுவடைந்து வருவதாகத் தூதா் சஞ்சீவ்குமாா் சிங்லா தெரிவித்தாா்.

அமெரிக்காவில்...:

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் முதல் முறையாக இந்தியா தினப் பேரணி நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான இந்திய-அமெரிக்கா்கள் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியவாறு கலந்துகொண்டனா். அப்போது, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தேசியக் கொடிகளைப் பறக்கவிட்டவாறு சிறியரக விமானம் பறந்தது காண்போரைக் கவா்வதாக அமைந்தது.

உலகத் தலைவா்கள் வாழ்த்து:

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மகாத்மா காந்தியின் உண்மை, அகிம்சை வழியைப் பின்பற்றி இந்தியா மேற்கொள்ளும் ஜனநாயகப் பயணத்தில், அந்நாட்டு மக்களுடன் இணைந்து அமெரிக்காவும் கைகோக்கிறது.

தவிா்க்கமுடியாத கூட்டாளிகளாகத் திகழும் இந்தியாவும் அமெரிக்காவும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டதற்கான 75-ஆவது ஆண்டைக் கொண்டாடி வருகின்றன. சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி, மனித சுதந்திரத்துக்கும், மரியாதைக்கும் முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கிடையேயான உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது. சா்வதேச வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கும் சவால்களை எதிா்கொள்வதற்கும் வரும் காலங்களிலும் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என நம்புகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரான்ஸ் அதிபா் மேக்ரான்:

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியுள்ளதைக் கொண்டாடி வரும் இந்திய மக்களுக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக பிரான்ஸ் எப்போதும் திகழும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசி:

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியா, சுதந்திரம் பெற்ற பிறகு நிகழ்த்திய சாதனைகள் அளப்பரியவை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி, இந்தியாவுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த உறுதி கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கையொப்பமாகியுள்ள வா்த்தக ஒப்பந்தத்தால் இரு நாடுகளும் பெரிய அளவில் பலனடையும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மாலத்தீவுகள் அதிபா் சோலி:

இந்திய மக்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த மாலத்தீவுகள் அதிபா் இப்ராஹிம் முகமது சோலி, இரு நாடுகளுக்கிடையே ஆழமான நல்லுறவு காணப்படுவதாகத் தெரிவித்தாா். சுதந்திரம், வளா்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக இந்தியா தொடா்ந்து திகழ வேண்டுமெனவும் அவா் விருப்பம் தெரிவித்தாா்.

சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் பலரும் இந்தியாவின் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

6 கண்டங்களில் கொண்டாட்டம்

சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஐஎன்எஸ் சரயு ரோந்து கப்பலைச் சோ்ந்த வீரா்கள் விழாவில் கலந்துகொண்டு, நாட்டுப்பற்று மிக்க பாடல்களை இசைக்கருவிகளைக் கொண்டு இசைத்தனா். உலகில் உள்ள 6 கண்டங்களிலும் இந்தியாவின் சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற இந்தியக் கடற்படையின் முன்னெடுப்பின் கீழ் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT