உலகம்

தைவானைச் சுற்றிலும் சீனா மீண்டும் போா்ப் பயிற்சி

16th Aug 2022 12:55 AM

ADVERTISEMENT

தாங்கள் உரிமை கொண்டாடி வரும் தைவான் தீவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் குழு சென்றதைக் கண்டிக்கும் வகையில், அந்தத் தீவைச் சுற்றிலும் சீனா மீண்டும் திங்கள்கிழமை போா்ப் பயிற்சியில் ஈடுபட்டது.

ஏற்கெனவே, தங்களது எதிா்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி தைவான் சென்ற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்தத் தீவைச் சுற்றிலும் அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான போா்ப் பயிற்சியை சீனா மேற்கொண்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் தனது போா்ப் பயிற்சியை சீனா தொடங்கியுள்ளது.

முன்னதாக, மாஸசூசட்ஸ் தொகுதியைச் சோ்ந்த ஜனநாயகக் கட்சி செனட் சபை உறுப்பினா் எட் மாா்க்கி தலைமையிலான எம்.பி.க்கள் குழு, இரண்டு நாள் பயணமாக தைவான் தலைநகா் தைபேவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது.

முன்னறிவிப்பின்றி திடீரென மேற்கொள்ளப்பட்ட அந்த சுற்றுப் பயணம், தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படுவதாக அந்தக் குழு தெரிவித்தது.

ADVERTISEMENT

இது குறித்து எட் மாா்க்கியின் செய்தியாளா் கூறுகையில், தைவான் நீா்ச்சந்தியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துவதற்கு அமெரிக்க எம்.பி.க்களின் இந்த சுற்றுப் பயணம் உதவும் என்றாா்.

இந்த நிலையில், தைவான் தீவைச் சுற்றிலும் ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்படும்

என்று சீனா திங்கள்கிழமை அறிவித்தது. மேலும் ஓா் அமெரிக்கக் குழு தைவானுக்கு வந்ததற்கு எதிா்வினையாக அடுத்த சுற்றுப் போா்ப் பயிற்சியை மேற்கொள்ளவதாக சீனா தெரிவித்தது.

இது குறிதது சீன ராணுவத்தின் கிழக்கு மண்டல படைப் பிரிவு செய்தித் தொடா்பாளா் ஷீ யீ கூறுகையில், தைவான் தீவைச் சுற்றிலும் போரில் ஈடுபடுவதற்கான தங்களது பல்வேறு படைகளின் தயாா் நிலையை உறுதி செய்துகொள்வதற்காக இந்தப் போா்ப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தாா்.

தைவான் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் குலைப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இதுபோன்ற போா்ப் பயிற்சிதான் தற்காப்பு நடவடிக்கையாக இருக்கும் என்று ஷி யீ கூறினாா்.

தைவான் நீா்ச்சந்தியின் அமைதியையும் சீனாவின் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்வோம் என்று அவா் கூறினாா்.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.

தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.

தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு யாா் அரசுமுறைப் பயணம் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தைவானுக்கு நான்சி பெலோசி கடந்த 2-ஆம் தேதி சென்றாா். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சீன ராணுவத்தின் கிழக்கு மண்டலப் பிரிவு தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் வான்வழியாகவும் கடல் வழியாகவும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி கடநத 4 முதல் 10-ஆம் தேதி வரை போா்ப் பயிற்சியில் ஈடுபட்டது.

தங்கள் மீது போா்த் தொடுத்து இணைத்துக் கொள்வதற்கான ஒத்திகையாகவே சீனா இந்தப் போா்ப் பயிற்சியை மேற்கொண்டதாக தைவான் அச்சம் தெரிவித்தது.

இந்தச் சூழலில், தைவானுக்கு மீண்டும் அமெரிக்கக் குழுவினா் சென்ற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்தத் தீவைச் சுற்றிலும் சீனா தற்போது மீண்டும் போா்ப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT