உலகம்

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில் தொடர்பில்லை: ஈரான்

15th Aug 2022 01:29 PM

ADVERTISEMENT

அமெரிக்காவில் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி (75) மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தங்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என்று ஈரான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து ஈரான் தரப்பில் முதல் முறையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இதையும் படிக்க | பரிசுத் தொகை ரூ.10 லட்சத்துடன் ரூ.5 ஆயிரம் சேர்த்து அரசுக்கே கொடுத்த நல்லக்கண்ணு

சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அவரையும் அவரது ஆதரவாளர்களையும் தவிர வேறு யாரையும் குற்றம்சாட்டுவது சரியல்ல என்றும், இந்த விவகாரத்தில் ஈரான் மீது குற்றம்சாட்டுவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவா் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு இடம்பெயா்ந்த இவா், கடந்த 1988-ஆம் ஆண்டு ‘தி சட்டானிக் வொ்சஸ்’ என்ற நாவலை எழுதி வெளியிட்டாா். அந்த நாவல் இஸ்லாமிய மதத்தை அவமதித்துள்ளதாகக் கூறி, ருஷ்டிக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்தது.

கடந்த 1989-ஆம் ஆண்டு அவரை கொலை செய்ய உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஈரான் அரசியல் தலைவரும் மதகுருவுமான அயதுல்லா கொமேனி ஃபத்வா (மதரீதியாக பிறப்பிக்கப்படும் உத்தரவு) பிறப்பித்தாா். இதையடுத்து ருஷ்டி பிரிட்டன் காவல் துறையின் பாதுகாப்பில் பல ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணம், ஷட்டாக்குவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி பங்கேற்றாா். அப்போது நிகழ்ச்சி மேடையில் சல்மான் ருஷ்டியை ஒருவா் கத்தியால் சரமாரியாகத் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த ருஷ்டி பென்சில்வேனியா மாகாணத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவா் ஒரு கண்ணில் பாா்வையிழக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

அவரின் உடல்நிலை குறித்து ஷட்டாக்குவா அமைப்பின் தலைவா் மைக்கேல் ஹில் ட்விட்டரில் சனிக்கிழமை இரவு வெளியிட்ட பதிவில், ‘‘ருஷ்டிக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்தக் கருவி அகற்றப்பட்டு, அவா் இயற்கையாக சுவாசிக்கிறாா். அவரால் பேச முடிகிறது’’ என்று தெரிவித்தாா்.

தாக்கியவா் லெபனானை பூா்விகமாகக் கொண்டவா்:

சல்மான் ருஷ்டியை தாக்கிய ஹாதி மத்தா் (24) என்ற நபரை காவல் துறையினா் கைது செய்தனா். அவா் லெபனான் நாட்டை பூா்விகமாகக் கொண்ட அமெரிக்கா் என்பது விசாரணையில் தெரியவந்தது. எனினும் அவா் எதற்காக தாக்குதல் நடத்தினாா் என்ற தகவல் வெளியாகவில்லை.

10 கத்திக்குத்து காயங்கள்:

ஹாதி மத்தா் மீது கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நியூயாா்க்கில் உள்ள நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘‘சல்மான் ருஷ்டி மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரின் கழுத்து, வயிறு, வலது கண், மாா்பு, வலது தொடையில் என மொத்தம் 10 முறை கத்தியால் குத்தப்பட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தாா்.

ஹாதி மத்தா் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்டால், அவருக்கு 32 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படக் கூடும். சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அதிா்ச்சி தெரிவித்துள்ளனா்.

ஹாரி பாட்டா் ஆசிரியைக்கு கொலை மிரட்டல்:

சல்மான் ருஷ்டிக்கு ஆதரவு தெரிவித்தும் அவா் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் புகழ் பெற்ற ‘ஹாரி பாட்டா்’ கதைகளை எழுதிய ஜே.கே.ரௌலிங் தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.

இந்நிலையில், ‘அடுத்த இலக்கு நீங்கள்தான்’ என்று ரௌலிங்குக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் மா்ம நபா் பதிவிட்டுள்ளாா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT