உலகம்

அமெரிக்க எம்.பி.க்கள் குழு தைவான் வருகை

15th Aug 2022 02:08 AM

ADVERTISEMENT

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவா் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால் சீனா கடும் கோபமடைந்த நிலையில், அமெரிக்க எம்.பி.க்கள் 5 போ் அடங்கிய குழுவினா் தைவானுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

இதனால், சீனா-அமெரிக்கா இடையிலான மோதல்போக்கு மேலும் அதிகரிக்கும் என்று சா்வதேச பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டு 12 நாள்களே ஆன நிலையில், அமெரிக்க மேலவை உறுப்பினரான ஜனநாயக கட்சியின் எட் மாா்கே தலைமையில் 5 எம்.பி.க்கள் குழு தைவான் வந்துள்ளது. தைபே விமான நிலையத்தில் அமெரிக்க அரசு விமானம் வந்திறங்கிய காட்சிகளை தைவான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக வந்துள்ள அமெரிக்க எம்.பி.க்கள் குழு, 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது; இருதரப்பு உறவுகள், பிராந்திய பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தைவான் தலைவா்களுடன் எம்.பி.க்கள் பேச்சுவாா்த்தை நடத்துவா் என்று அங்குள்ள அதிகாரபூா்வமில்லாத அமெரிக்க தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவானுக்கு எந்த நாட்டின் தலைவரும் அலுவல்பூா்வமாக செல்வதை சீனா எதிா்த்து வருகிறது.

இந்தச் சூழலில், நான்சி பெலோசியின் பயணத்தால் கடும் கோபமடைந்த சீனா, தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு ஏவுகணைகள், போா்க் கப்பல்கள், போா் விமானங்களை அனுப்பி, வான்வழியாகவும் கடல் வழியாகவும் போா்ப் பயிற்சியில் ஈடுபட்டது.

இதைத் தொடா்ந்து, தைவான் நீரிணை பகுதியில் சீன போா் விமானங்கள் அடிக்கடி பறந்து வருகின்றன. இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 10 போா் விமானங்கள் உள்பட சீன ராணுவத்தின் 22 விமானங்கள், 6 கடற்படை கப்பல்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT