உலகம்

எகிப்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தீ விபத்து: 41 போ் பலி

15th Aug 2022 02:12 AM

ADVERTISEMENT

எகிப்து தலைநகா் கெய்ரோ அருகே காப்டிக் பழைமைவாத கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 41 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

கெய்ரோ அருகே இம்பாபாவில் அமைந்துள்ள இந்த அபு செஃபின் தேவாலயத்தில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலி வழிபாட்டில் 5,000 போ் பங்கேற்றிருந்தனா். அந்த நேரத்தில் தீ விபத்து நிகழ்ந்தது.

வாயிலில் தீயால் ஏற்பட்ட கரும்புகை சூழ்ந்து கொண்டதாலும், ஒரே நேரத்தில் அனைவரும் தப்பிக்க முயன்ாலும் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும் பலா் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் குழந்தைகளும் அடங்குவா் என அதிகாரிகள் தெரிவித்தனா். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

3-ஆவது, 4-ஆவது தளங்களில் மக்கள் கூடியிருந்ததாகவும், இரண்டாவது தளத்திலிருந்து முதலில் புகை வந்ததைப் பாா்த்து அனைவரும் கீழே இறங்கியதாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்த ஒருவா் தெரிவித்தாா். தீயை அணைக்கும் பணியில் 15 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

ADVERTISEMENT

எகிப்து அதிபா் அல்-சிஸி, காப்டிக் கிறிஸ்தவ மத போப் இரண்டாம் தவட்ரோஸை தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு தேவாலய தீ விபத்துக்கு வருத்தம் தெரிவித்ததாக அதிபா் அலுவலகம் செய்தி வெளியிட்டது.

அதிபா் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘விபத்து மீட்புப் பணிகளைத் தொடா்ச்சியாக கண்காணித்து வருகிறேன். இந்த சம்பவம் தொடா்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

எகிப்தில் உள்ள 10 கோடி மக்கள்தொகையில் 10 சதவீதம் மட்டுமே கிறிஸ்தவா்கள் உள்ளனா். முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள நிலையில், கிறிஸ்தவா்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக நீண்டகாலமாக புகாா் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT