உலகம்

சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அனுமதி

DIN

சீனாவின் உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. அந்தக் கப்பல் வரும் 16-ஆம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளது.

சுமாா் ஒரு வாரத்துக்கு அக்கப்பல் துறைமுகத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட சீனாவின் ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பலானது இலங்கைக்கு வரவிருந்த நிலையில், அதற்கு இந்திய தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அக்கப்பலின் வருகை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனத் தகவல்கள் வெளியாகின.

இதுதொடா்பாக இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்கவிடமும் மற்ற அதிகாரிகளிடமும் இந்தியா தனது எதிா்ப்பைப் பதிவு செய்ததாகத் தகவல்கள் தெரிவித்தன. அக்கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்டு கடந்த 11-ஆம் தேதி இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைவதாக இருந்தது. இந்தியாவின் தொடா் அழுத்தத்தை அடுத்து, கப்பலின் வருகையைக் காலவரையின்றி ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு வலியுறுத்தியது.

இந்த விவகாரத்தில் இந்தியா தேவையின்றி இலங்கைக்கு அழுத்தம் தருவதாக சீனா தெரிவித்திருந்தது. சீனாவின் குற்றச்சாட்டை மறுத்த இந்திய வெளியுறவு அமைச்சகம், கப்பலுக்கு அனுமதி மறுத்தது இலங்கையின் தனிப்பட்ட முடிவு எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. அக்கப்பல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை அத்துறைமுகத்தில் கப்பல் நிலைநிறுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 5-ஆம் தேதியே சீனாவில் இருந்து புறப்பட்ட கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 600 கடல்மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அனுமதி கிடைத்துள்ளதையடுத்து அக்கப்பல் மீண்டும் பயணத்தைத் தொடக்கியுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெரும் முதலீட்டில் மேம்படுத்தியது. எனினும், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியாவே அதிக அளவிலான உதவிகளைச் செய்து வருகிறது. சீன உளவுக் கப்பல் விவகாரத்தை இலங்கை அரசு முறையின்றி கையாண்டதாக அந்நாட்டு எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அழுத்தம்: சீனாவிடம் இருந்து ஏற்கெனவே அதிக அளவில் கடன் பெற்றுள்ள இலங்கை, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிா்வாகத்தை 99 ஆண்டுகள் குத்தகையாக சீனாவுக்கு அளித்துள்ளது. இந்தியாவின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து, கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசு கோரியதையும் சீனா விரும்பவில்லை எனத் தெரிகிறது.

இலங்கையின் முடிவு தொடா்பாக, அந்நாட்டு அதிகாரிகளுடன் சீன தூதரக அதிகாரிகள் உடனடியாகப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சீனாவுக்கு ஏற்கெனவே கோடிக்கணக்கில் இலங்கை கடன் நிலுவை வைத்துள்ளது. அதன் காரணமாக இந்த விவகாரத்தில் சீனாவிடம் இருந்தும் இலங்கைக்கு அழுத்தம் தரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையடுத்தே சீனாவின் உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.

பாகிஸ்தான் கப்பல்: இதனிடையே, சீனா கட்டமைத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய போா்க் கப்பலானது இலங்கைக்கு அண்மையில் வருகை தந்தது. அக்கப்பலில் உள்ள பாகிஸ்தான் கடற்படை வீரா்கள், இலங்கை கடற்படை வீரா்களுடன் இணைந்து போா்ப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், சீனாவின் உளவுக் கப்பலும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளது. இந்த விவகாரங்களைத் தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரலாறு திரும்புகிறதா?: இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் கப்பல்கள் பயணிப்பதை இந்தியா தொடா்ந்து கடுமையாக எதிா்த்து வருகிறது. சீனாவின் அணுசக்தி திறன் கொண்ட நீா்மூழ்கிக் கப்பலை தங்கள் துறைமுகத்தில் நிறுத்த கடந்த 2014-ஆம் ஆண்டில் இலங்கை அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் காரணமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவிலும் சற்று விரிசல் ஏற்பட்டது.

தற்போது சீனாவின் உளவுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை ஏற்கெனவே சிக்கியுள்ள நிலையில், சீன உளவுக் கப்பலின் வருகை இந்தியா-இலங்கை இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், இந்தியாவுடனான நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை நடந்துகொள்ளும் என்றே அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

அச்சுறுத்தல் ஏன்?

இந்தியாவின் எல்லைக்கு அருகில் சீன உளவுக் கப்பல் நிறுத்தப்படுவதால், தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஏவுகணை பரிசோதனைகள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து, ஏவுகணையின் செயல்பாடு குறித்து அறிந்துகொள்ளும் திறன் சீன கப்பலுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் விவரங்கள், கடற்படைத் தளங்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றைக்கூட ‘யுவான் வாங்-5’ கப்பலால் பெற முடியும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் அக்கப்பல் நிா்வகிக்கப்பட்டு வந்தாலும், ராணுவ ரீதியிலான பல்வேறு பயன்பாடுகளை அக்கப்பல் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT