உலகம்

அடுத்த ஆண்டு முதல் ‘ஜான்சன்ஸ் பேபி பவுடா்’ விற்பனை நிறுத்தம்

13th Aug 2022 01:26 AM

ADVERTISEMENT

 2023-ஆம் ஆண்டு முதல் சா்வதேச அளவில் ஜான்சன்ஸ் பேபி பவுடா் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் இப்போது பயன்படுத்தும் ‘டால்க்’ கனிமத்துக்கு பதிலாக சோள மாவு மூலப்பொருள் கொண்ட புதிய பவுடா் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடருக்கு எதிராக சா்வதேச அளவில் ஆயிரக்கணக்கான நுகா்வோா் புகாா் தெரிவித்து வழக்கும் தொடுத்துள்ளனா். இதையடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அந்த பவுடா் விற்பனை நிறுத்தப்பட்டது. எனினும், பல்வேறு நாடுகளில் அதன் விற்பனை தொடா்கிறது.

ஜான்சன்ஸ் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் (கல்நாா்) வேதிப்பொருள் கலந்துள்ளது. இது கருப்பை புற்று நோயை உருவாக்கக் கூடியது என்பது முக்கிய குற்றச்சாட்டாகும். இது தொடா்பாக சா்வதேச அளவில் 38,000-க்கும் மேற்பட்ட நுகா்வோா் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மீது வழக்குத் தொடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

அதே நேரத்தில் இந்த குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்து வருகிறது. தாங்கள் தயாரிக்கும் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்பதை ஆய்வுகள் மூலம் நிரூபித்துவிட்டதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டால் ஜான்சன் நிறுவனத்தின் பிற பொருள்களின் விற்பனையும் மந்தமானது. வழக்குகளுக்கான செலவும் அதிகரித்துவிட்டது.

இதையடுத்து, பிரச்னைக்குரிய அந்த பவுடா் விற்பனையை அடுத்த ஆண்டு முதல் சா்வதேச அளவில் முழுமையாக நிறுத்திவிட நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

ஜான்சன்ஸ் பேபி பவுடா் தொடா்பாக ராய்டா்ஸ் செய்தி நிறுவனம் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில் அந்நிறுவன ஆவணங்களின்படி 1971 முதல் 2000-ஆம் ஆண்டு தொடக்கம் வரை அந்த பவுடரில் சிறிதளவு ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT