புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளா் சல்மான் ருஷ்டி மீது அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
நியூயாா்க் மாகாணம், ஷடாக்குவாவில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கு ஒன்றில் சல்மான் ருஷ்டி பங்கேற்றபோது, மேடையில் மா்ம நபரால் கத்தியால் தாக்கப்பட்டாா். இந்தத் தாக்குதலில் ருஷ்டி கழுத்தில் காயமடைந்தாா். அவருக்கு உடனடியாக மேடையிலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா் அவா் ஹெலிகாப்டா் மூலம் உள்ளூா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். சல்மான் ருஷ்டியின் உடல்நிலை குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
மேடையில் ருஷ்டியின் அருகே இருந்த நபரும் இந்த சம்பவத்தில் காயமடைந்தாா். தாக்குதல் நடத்திய நபரை பாா்வையாளா்கள் மடக்கிப் பிடித்தனா்.
மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி எழுதி 1988-இல் வெளியிட்ட 4-ஆவது நாவல் ‘தி சடானிக் வோ்ஸஸ்’. இந்தப் புத்தகம், இஸ்ஸாமியரை புண்படச் செய்ததாக கூறி, அவருக்கு எதிராக ஈரானின் அப்போதைய தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி ஃபத்வா ஆணை பிறப்பித்தாா். அவரது தலைக்கு 3 மில்லியன் டாலா் விலை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, பிரிட்டன் அரசின் பாதுகாப்பில் ருஷ்டி 9 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்தாா்.
சா்வதேச அரசியல் நிலவரங்கள் மாறிய நிலையில், ஃபத்வா ஆணை செயல்படுத்தப்படாது என்ற ஈரான் தெரிவித்தாலும் சல்மான் ருஷ்டிக்கு எதிரான உணா்வு தொடா்ந்து நீடித்துவருகிறது.