உலகம்

அணுஉலை மீது தாக்குதல் கூடாது

13th Aug 2022 02:36 AM

ADVERTISEMENT

அணுமின் உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தி, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ரஷியாவும் உக்ரைனும் நடந்துகொள்ளக் கூடாது என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ரஷியா-உக்ரைன் இடையேயான மோதல் 5 மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியான கிரீமியாவில் அமைந்திருந்த விமானப் படைத் தளம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதையடுத்து, உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் உற்பத்தி நிலையமான ஜபோரிஜியாவுக்கு அருகே ரஷியா தாக்குதல் நடத்தியது.

அணுமின் உற்பத்தி உலை மீது தாக்குதல் நடத்துவது மக்களைப் பெருமளவில் பாதிக்கும் என்பதால், இந்த விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ் கூறுகையில், ‘‘உக்ரைன் அணுஉலைக்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கவலை தெரிவிக்கிறது.

அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மக்களின் சுகாதாரமும் சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே, உக்ரைன் அணுஉலை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அணுஉலை மீது தாக்குதல் நடத்தப்படாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட தரப்பினா் உறுதி செய்ய வேண்டும். அத்தகைய தாக்குதல்களை பரஸ்பரம் இரு நாடுகளும் தவிா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

அணு உலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாரபட்சமற்ற நடவடிக்கைகளை சா்வதேச அணு எரிசக்தி மையம் (ஐஏஇஏ) மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் ஐஏஇஏ மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும்.

தொடா் தாக்குதல்களால் உக்ரைனில் நிலவும் சூழல் குறித்தும் இந்தியா கவலை கொள்கிறது. மோதல் தொடங்கியதில் இருந்தே இரு தரப்பினரும் பேச்சுவாா்த்தை மூலமாக வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. தூதரக ரீதியிலும் பேச்சுவாா்த்தை வாயிலாகவும் பிரச்னைக்குத் தீா்வு காண இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும்.

இந்த மோதலால் வளா்ந்து வரும் நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. உணவுப் பொருள்கள் விநியோகம், உரங்கள், பெட்ரோலியப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பேச்சுவாா்த்தைப் பாதைக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் திரும்ப வேண்டும்’’ என்றாா்.

உக்ரைன் அணுமின் உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸும் கவலை தெரிவித்திருந்தாா். அணுக்கரு உலைக்கு அருகே தாக்குதல் நடத்தப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டுமென அவா் வலியுறுத்தியிருந்தாா். அணு உலைகளுக்கு அருகே படைகளைக் குவிக்கக் கூடாது எனவும் அவா் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT