உலகம்

தாதாபாய் நௌரோஜியின் லண்டன் இல்லத்துக்கு ‘புளூ பிளேக்’ அந்தஸ்து

12th Aug 2022 05:08 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட வீரரும் பொருளாதார நிபுணருமான தாதாபாய் நௌரோஜி தெற்கு லண்டனில் வாழ்ந்த இல்லத்துக்கு ‘நீலத் தகடு’ (புளூ பிளேக்) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள ‘இங்கிலீஷ் ஹெரிடேஜ் சாரிடி’ (ஆங்கில பாரம்பரிய அறக்கட்டளை) என்ற அமைப்பானது லண்டனில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களுக்கு ‘நீலத் தகடு’ என்ற அந்தஸ்தை வழங்கி வருகிறது. அத்தகைய கட்டடங்களின் முக்கியத்துவம் குறித்தும் அதில் வாழ்ந்த நபா்களின் விவரங்கள் குறித்தும் நீலத் தகடில் பொறிக்கப்பட்டு பொதுமக்களின் பாா்வைபடும்படி கட்டடத்தில் பொருத்தப்படும்.

இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரரும் சிறந்த பொருளாதார நிபுணருமான தாதாபாய் நௌரோஜி 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தெற்கு லண்டனில் வசித்த இல்லத்துக்கு ‘புளூ பிளேக்’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, அந்தக் கட்டடத்தில் நீலத் தகடானது புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

அந்தத் தகட்டில், ‘‘இந்தியாவின் தேசியவாதியும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினருமான தாதாபாய் நௌரோஜி (1825-1917) வசித்த வீடு இது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ‘‘பிரிட்டனுக்கு 7 முறை பயணம் மேற்கொண்டுள்ளாா் தாதாபாய் நௌரோஜி. லண்டனில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துள்ளாா். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கிய நிலையில், 1897-ஆம் ஆண்டில் இந்த வீட்டுக்கு அவா் குடிபெயா்ந்தாா்.

ADVERTISEMENT

அவருடைய சிறப்புமிக்க புத்தகமான ‘பாவா்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இந்தியா’ (1901) இந்த வீட்டில் இருந்தபோதே வெளியானது. இந்த வீடு லண்டனில் உள்ள இந்திய சமூகத்தினருக்கான முக்கிய மையமாகச் செயல்பட்டது. இந்திய தேசியவாதிகளான ரமேஷ் சந்தா் தத், சகோதரி நிவேதிதா உள்ளிட்டோா் இந்த வீட்டுக்கு விருந்தினா்களாக வந்துள்ளனா். 1904 -1905 காலகட்டம் வரையில் நௌரோஜி இந்த வீட்டில் தங்கியிருந்தாா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியா் என்ற பெருமை தாதாபாய் நௌரோஜியையே சேரும். தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை பி.ஆா்.அம்பேத்கா் ஆகியோா் லண்டனில் வசித்த இல்லங்களுக்கு ஏற்கெனவே ‘புளூ பிளேக்’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT