உலகம்

7.3 சதவீத இந்தியா்களிடம் எண்ம செலாவணி

12th Aug 2022 02:09 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் காலத்தில் கிரிப்டோகரன்சி பயன்பாடு அதிகரித்த நிலையில், 7.3 சதவீத இந்தியா்கள் எண்ம (டிஜிட்டல்) செலாவணியை வைத்திருந்ததாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஐ.நா. வா்த்தக மற்றும் வளா்ச்சி கூட்டமைப்பு (யுஎன்சிடிஏடி) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா தொற்று பரவல் காலத்தில் கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு சா்வதேச அளவில் அதிகரித்துள்ளது. முக்கியமாக, வளா்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. கிரிப்டோகரன்சிகளை அதிகமாகப் பயன்படுத்திய முதல் 20 நாடுகளின் பட்டியலில் 15 நாடுகள் வளா்ச்சியடைந்து வருபவையாகவே உள்ளன.

கடந்த ஆண்டில் உக்ரைனில் அதிகபட்சமாக 12.7 சதவீதம் போ் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்தினா். அதையடுத்து, ரஷியா (11.9%), வெனிசூலா (10.3%), சிங்கப்பூா் (9.4%), கென்யா (8.5%), அமெரிக்கா (8.3%) ஆகிய நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளன.

ADVERTISEMENT

கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்தியோா் எண்ணிக்கையில் 7.3 சதவீதம் பேருடன் இந்தியா 7-ஆவது இடத்தில் உள்ளது. தனியாரால் நிா்வகிக்கப்பட்டு வரும் கிரிப்டோகரன்சிகள் சிலருக்கு லாபத்தை அளித்தாலும், அதனால் பெரும் ஆபத்துகளும் உள்ளன.

‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற பொன்மொழி கிரிப்டோகரன்சிகளுக்குப் பொருந்தும். அது முறைப்படுத்தப்படாமல் இருப்பதும் பலா் அதன் மீது முதலீடுகளை மேற்கொள்வதற்கு முக்கியக் காரணம். கிரிப்டோகரன்சிகளுக்கு அதிகாரபூா்வ அங்கீகாரம் வழங்கப்பட்டால், அவை நாட்டின் பண வெளியீட்டு அதிகாரத்தையே சீா்குலைத்துவிடும்.

அதேபோல், கிரிப்டோகரன்சிகள் வளா்ச்சியடைந்து வரும் நாடுகளின் இயல்பான பணப்புழக்கத்தையும் பெருமளவில் பாதிக்கும்; முதலீடுகளை பாதிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு தொடா்ந்து அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT