உலகம்

இலங்கையில் முடிவுக்கு வந்தது மக்கள் போராட்டம்

DIN

இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அதிபருக்கு எதிராக மக்கள் நடத்திவந்த போராட்டம் 123 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், "ஆட்சி மாற்றம்' கோரி நடத்தி வரும் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பொருளாதார சீர்குலைவுக்கு காரணமான "ராஜபட்ச சொந்த ஊருக்குத் திரும்பி போ' என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டக்காரர்கள் கடந்த ஏப். 9-ஆம் தேதிமுதல் காலிமுகத் திடலில் (அதிபர் செயலகம்) முற்றுகைப் போராட்டம் நடத்தி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதுதொடர்பாக போராட்டக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் நாணயக்கார கூறுகையில், "காலிமுகத் திடலிலிலிருந்து வெளியேறுவதாக முடிவு செய்துள்ளோம்.
எனினும், போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமில்லை' என்றார்.
இளம் துறவி கோஸ்வத்தே மஹானம கூறுகையில், "நாட்டின் அவசரநிலை பிரகடனத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நாடாளுமன்றத்துக்கு புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிபர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றார்.
இந்த இடத்தில் நாங்கள் போராட்டத்தை நிறுத்தினாலும் ஆட்சி மாற்றம் கோரி நடைபெறும் எங்களின் போராட்டம் தொடரும் என்று விதர்ஷனா கன்னங்கரா எனும் சமூக ஆர்வலர் தெரிவித்தார்.
முன்னதாக, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச நாட்டைவிட்டுத் தப்பிச் சென்று பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.
அவர் இலங்கை அதிபரானதும் போராட்டக்காரர்கள் தங்கியுள்ள முகாம்கள் மற்றும் அதிபர் மாளிகை, அரசு அலுவலகங்களில் அத்துமீறி நுழைந்த கிளர்ச்சியாளர்களைக் கைது செய்ய அந்நாட்டு ராணுவம் மற்றும் காவல்துறைக்கு அதிகாரம் அளித்தார்.
ஏப்ரல் 9-ஆம் தேதிமுதல் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திவந்த போராட்டக்காரர்களை ஜூலை 22-ஆம் தேதி ராணுவம் வெளியேற்றியது. அதிபர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைவது சர்வதேச குற்றச் செயலாகவும் அறிவித்தது.
எனவே ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் காலிமுகத் திடலிலிலிருந்து வெளியேறுமாறு போராட்டக்காரர்களை காவல் துறை எச்சரித்தது. அதை ஏற்க மறுத்து போராட்டம் நடத்துவது எங்களின் உரிமை எனக் கூறி போராட்டக்காரர்கள் அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், காலிமுகத் திடலிலிருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளதோடு ரிட் மனுவையும் திரும்பப் பெற்றுள்ளனர்.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT