உலகம்

இலங்கை அதிபரின் அதிகாரங்களைக் குறைக்கும் மசோதா அறிமுகம்

11th Aug 2022 01:28 AM

ADVERTISEMENT

இலங்கை அதிபரின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

நீதித் துறை அமைச்சா் விஜயதாச ராஜபட்ச மசோதாவை அறிமுகம் செய்தாா். இந்த மசோதாவின்படி, அதிபரின் குறிப்பிட்ட சில அதிகாரங்கள், எம்.பி.க்கள் மற்றும் சமூகத்தில் மரியாதைக்குரிய அரசியல்சாரா நபா்கள் உள்ளடங்கிய அரசமைப்புக் குழுவுக்கு மாற்றப்படும்.

தோ்தல் ஆணைய உறுப்பினா்கள், தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள், அட்டா்னி ஜெனரல், மத்திய வங்கி ஆளுநா், காவல் துறை, பொதுப் பணி உயா் அதிகாரிகள், ஊழல் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்டோரை நேரடியாக நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கு இருக்காது.

மேற்கண்ட நியமனங்களில் அரசமைப்புக் குழுவின் பரிந்துரைபடியே அதிபா் நடவடிக்கை மேற்கொள்ள இயலும். அதிபராக இருப்பவா் வேறெந்த அமைச்சக பொறுப்பையும் வகிக்க இயலாது போன்ற அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இதன் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும். 225 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மூன்றில் இருபங்கு உறுப்பினா்கள் அங்கீகரிக்கும்போது இது சட்டமாக மாறும்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அதிபரின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்பது போராட்டக்காரா்களின் முக்கிய கோரிக்கையாகும்.

Tags : sri lanka
ADVERTISEMENT
ADVERTISEMENT