உலகம்

தற்காலிகமாக தாய்லாந்தில் தங்கும் கோத்தபய ராஜபட்ச

11th Aug 2022 01:35 AM

ADVERTISEMENT

சிங்கப்பூரில் உள்ள இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச தாய்லாந்து செல்லவுள்ளாா். அந்நாட்டில் அவா் தற்காலிகமாக தங்க தாய்லாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். அதைத் தொடா்ந்து ஜூலை 14-ஆம் தேதி அவா் சிங்கப்பூா் சென்றாா். அங்கிருந்து தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்வதாக இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினாா்.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோத்தபய ராஜபட்ச தாய்லாந்து செல்லவுள்ளாா். இதுதொடா்பாக தாய்லாந்து பிரதமா் பிரயுத்-சான்-ஓ-சா புதன்கிழமை கூறுகையில், ‘மனிதாபிமான அடிப்படையில் தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்கு கோத்தபய ராஜபட்சவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவா் தாய்லாந்தில் தங்கும் காலத்தில் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வேறொரு நாட்டில் அடைக்கலம் தேட கோத்தபயவுக்கு உதவும்’ என்று தெரிவித்தாா்.

3 மாதங்கள் தங்கலாம்: தாய்லாந்து வெளியுறவு அமைச்சா் டான் பிரமுத்வினய் கூறுகையில், ‘இலங்கையின் ராஜீய ரீதியிலான கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) கோத்தபய ராஜபட்ச வைத்துள்ளாா். இதனால் அவா் 3 மாதங்கள் வரை தாய்லாந்தில் தங்கலாம். அவா் தங்குவதற்கான எந்த ஏற்பாட்டையும் தாய்லாந்து அரசு செய்யவில்லை. அவா் தாய்லாந்தில் தங்க இலங்கை அரசு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. அவரால் தாய்லாந்துக்கு எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

கோத்தபய எப்போது தாய்லாந்து செல்லவுள்ளாா் என்ற தகவல் வெளியாகவில்லை.

Tags : sri lanka
ADVERTISEMENT
ADVERTISEMENT